சென்னை விமான நிலையத்தில் ஐந்தாவது முனையம் எப்போது? 5.5 கோடி பயணிகளை கையாள முடியும்

  • சென்னை: சென்னை விமான நிலையத்தில் 5-வது முனையம் அமைப்பதற்கான திட்டமிடல் நடைபெற்று வருகிறது. அது செயல்பாட்டுக்கு வந்தால் சென்னை விமான நிலையத்தின் மொத்த பயணிகள் கையாளும் திறன் ஆண்டுக்கு 5.5 கோடியாக உயரும். பயணிகளின் கருத்துகளை நேரடியாக பெற விமான நிலையத்தின் முக்கிய பகுதிகளில் கியூஆர் குறியீடுகள் வைக்கப்படும் என மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறினார்.

    Advertisement

    சென்னை விமான நிலையத்தில் சர்வதேச தரத்திலான சேவையை வழங்கி, பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் 1-வது முனையத்தின் எதிரே ரூ.22.88 கோடியில் பயணிகள் 'பிக்கப் பாயிண்ட் பிளாசா' அமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    Advertisement

    விமான நிலைய முனையத்தில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் இந்த பிளாசா அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரே நேரத்தில் 29 வாகனங்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். சுமார் 150 பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு குடிநீர், விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு குறித்த தகவல் வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

    இதுவரை 1-வது முனையத்தில் இருந்து டாக்சியைப் பெற சுமார் 600 மீட்டர் தொலைவில் உள்ள வாகன நிறுத்தமிடத்துக்கு பயணிகள் செல்ல வேண்டியிருந்தது. புதிய பிக்கப் பிளாசா மூலம் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுடன் வரும் குடும்பங்களின் சிரமம் குறையும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த 'பிக்கப் பிளாசா'வில் தினமும் சுமார் 5 ஆயிரம் மஞ்சள் நிற பதிவு பலகை கொண்ட டாக்சிகளை கையாள முடியும். இதன் மூலம் பயணிகளின் சிரமம் குறைவதுடன், விமான நிலையத்தில் வாகனப் போக்குவரத்தும் ஒழுங்குபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதுபற்றி மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறுகையில், "சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து நவீன வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் மேலும் 100 விமான நிலையங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தின் 3-வது முனையப்பணிகள் ஏப்ரல் 2027-க்குள் நிறைவடைந்துவிடும்.

    புதிய முனையங்கள் செயல்பாட்டுக்கு வந்ததும் ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறன் உருவாகும். மேலும் சென்னை விமான நிலையத்தில் 5-வது முனையம் அமைப்பதற்கான திட்டமிடல் நடந்து வருகிறது. அது செயல்பாட்டுக்கு வந்தால் சென்னை விமான நிலையத்தின் மொத்த பயணிகள் கையாளும் திறன் ஆண்டுக்கு 5.5 கோடியாக உயரும். பயணிகளின் கருத்துகளை நேரடியாக பெற விமான நிலையத்தின் முக்கிய பகுதிகளில் கியூஆர் குறியீடுகள் வைக்கப்படும் என்றார்.

    English Summary

    If a fifth terminal is constructed at Chennai Airport, it will be able to handle 55 million passengers.