கூவம் அருகே வாக்கிங் போனார்! கம்பிக்குள் தலையைவிட்டார்! நான் ஓடுவதற்குள்! கே.ராஜன் ஓட்டுநர் உருக்கம்

  • சென்னை: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் திடீரென அடையாறு ஆற்றில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அப்போது நடந்தது என்ன என்பது குறித்து அவரது கார் ஓட்டுநர் சொன்ன தகவல்களை பார்க்கலாம்.

    தமிழ் திரையுலகில் மிகத் துணிச்சலாகவும், வெளிப்படையாகவும் பேசக்கூடிய மூத்த திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் (85), கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    கே. ராஜன்: திரையுலகப் பயணம்

    1983-ஆம் ஆண்டு வெளியான 'பிரம்மச்சாரிகள்' திரைப்படத்தின் மூலம் தனது தயாரிப்புப் பயணத்தைத் தொடங்கினார்.

    1980-கள் முதல் பல தமிழ்ப் படங்களைத் தயாரித்த இவர், சமீபகாலமாக யூடியூப் நேர்காணல்களில் சினிமா துறையின் முறைகேடுகள், தயாரிப்பாளர்களின் நஷ்டங்கள் மற்றும் நடிகர்களின் அதிகப்படியான சம்பளப் பிரச்சனை குறித்துப் பேசிப் பிரபலமானவர்.

    எதற்கும் அஞ்சாத, தைரியமான ஒரு மனிதர் இப்படி ஒரு முடிவை எடுத்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    ஓட்டுநர் நேரில் கண்ட கொடூரம்

    சம்பவத்தன்று கே. ராஜனை காரில் அழைத்துச் சென்ற அவரது ஓட்டுநர் (கடந்த 7 ஆண்டுகளாகப் பணிபுரிபவர்) அளித்த பேட்டியில்: "அய்யா எப்போதும் கார் ரைடு செல்லலாம் என்று அழைப்பார். கடந்த 17ஆம் தேதி மாலையும் அப்படித்தான் கூட்டிச் செல்லச் சொன்னார்.

    அடையாறு பாலத்தின் அருகே வந்ததும், 'நான் வாக்கிங் செல்ல வேண்டும், நீ காரை எடுத்துக் கொண்டு போ' என்றார். நான் காரை நகர்த்திச் சென்று, பக்கவாட்டு கண்ணாடியில் அவரை கவனித்தபோது, திடீரென அங்கிருந்த கம்பிக்குள் தலையை விட்டார்.

    உடனே அதிர்ச்சி அடைந்த நான் வண்டியை நிறுத்திவிட்டு அவரை காப்பாற்ற ஓடினேன். ஆனால் அதற்குள் அவர் ஆற்றுக்குள் குதித்துவிட்டார். நான் வண்டியை நிறுத்திவிட்டு ஓடுவதற்குள் அவர் நீரில் மூழ்கிவிட்டார்.

    மேலும், அவர் பண நெருக்கடியிலோ அல்லது தனிமையிலோ வாடியதாகத் தனக்குத் தெரியவில்லை என்றும், அவரது நடத்தையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ஓட்டுநர் குறிப்பிட்டுள்ளார். அவர் குதித்த இடம் சேறும் சகதியுமான இடம் என்றும் அங்கு சேறே 10 அடிக்கு இருப்பதால் நீச்சல் தெரிந்தவர்கள் கூட அவரை காப்பாற்றுவது கஷ்டம் என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

    வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த உறவினர்

    கே. ராஜனின் மரணம் குறித்துப் பரவி வரும் வதந்திகளுக்கு அவரது உறவினர் அளித்த விளக்கங்கள்:

    குடும்பப் பிரச்சனை இல்லை: "அவர் குடும்பத்தினரால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார் என்பது முற்றிலும் பொய். சத்தம் பிடிக்காமல், தனிமையை விரும்பியே அவர் தனியாக வாழ்ந்தார். அவரது மகன்கள் தினமும் இரவு அவருடன் தங்குவார்கள்; மகள்கள் சமைத்த உணவே அவருக்கு தினசரி வழங்கப்படும்."

    பணப் பிரச்சனை இல்லை: "அவர் யாரிடமும் கடன் வாங்கவில்லை. மாறாக, பலருக்கு ரூ.20 கோடி வரை கடனாகக் கொடுத்து, அது திரும்ப வராத நிலையிலும் தாராளமாகவே வாழ்ந்தார். எனவே, கடன் பிரச்சனை காரணமல்ல. இது குறித்து அவர் பல்வேறு மேடைகளில் தெரிவித்துள்ளார்."

    தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன?

    கடந்த இரண்டு வருடங்களாகக் கடுமையான இதயக் கோளாறுகளால் கே. ராஜன் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    தாங்க முடியாத உடல்நலக் குறைவு: மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான், ரூ12 லட்சம் செலவில் அவருக்கு 'பேஸ்மேக்கர்' (Pacemaker) கருவி பொருத்தப்பட்டது.

    வலியின் உச்சம்: "என்னால் இந்த வலியைத் தாங்க முடியவில்லை, தலை பாரமாக இருக்கிறது" என்று குடும்பத்தினரிடம் கூறி, தூக்கமில்லாமல் தவித்துள்ளார்.

    சில நாட்களுக்கு முன்புதான் 3 மாதங்களுக்கான மருந்துகளையும் வாங்கியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தன் உடல்நலப் பாதிப்பால் ஏற்பட்ட கடுமையான வலியைத் தாங்க முடியாமலும், தனது உடல்நிலையால் குடும்பத்தினருக்குக் கூடுதல் கஷ்டம் வரக்கூடாது என நினைத்துமே அவர் இந்தத் தீவிரமான முடிவை எடுத்திருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் உருக்கத்தோடு தெரிவித்துள்ளனர். அது போல் அவர் மீது அவதூறு பரப்பாதீர்கள் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். தங்கள் அப்பாவிடம் வாங்கிய ரூ 20 கோடியை தயாரிப்பாளர்கள் திரும்ப கொடுத்தால் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தற்கொலை எதற்கும் தீர்வல்ல! தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொள்ள தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு அல்லது சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    English Summary

    Popular film producer K Rajan allegedly died by suicide after jumping into the Adyar River. Following the shocking incident, his car driver has shared details about the events leading up to the tragedy and what happened at the spot.