ரயிலில் பட்டாசு கொண்டு போறீங்களா? எத்தனை வருடம் ஜெயில் தெரியுமா? ரயில்வே எச்சரிக்கை

  • சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் போக ரயிலில் டிக்கெட் போட்டாச்சா? ஆனால், கூடவே பட்டாசுகளையும் எடுத்துக்கொண்டு போகலாம் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்! ஏன் தெரியுமா? ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம். ரயில்வே வெளியிட்டுள்ள இந்த எச்சரிக்கையைப் பற்றி தெரிந்துகொள்வது அவசியம்.

    Advertisement

    ரயிலில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வது, செல்போன்களில் சத்தமாகப் பாடல்கள் கேட்பது, வீடியோக்களைப் பார்ப்பது போன்ற செயல்களைக் கட்டுப்படுத்தவும் ரயில்வே ஏற்கனவே பல்வேறு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.

    Advertisement

    இதுதொடர்பாக ரயில்வே சட்டத்தின் 145-வது பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கவும், குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கவும் வழிவகை உள்ளது. மேலும், ரயில்களில் ஹெட்போன் பயன்படுத்துவது, மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் செல்போனில் பேசுவது குறித்து விழிப்புணர்வு அறிவிப்புகளை தெற்கு ரயில்வே கடந்த வாரம் வெளியிட்டது நினைவிருக்கலாம்.

    பட்டாசுக்கு தடை

    இந்நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றொரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. சொந்த ஊர்களுக்குச் செல்ல பலரும் ரயில் பயணத்துக்குத் தயாராகி வரும் நிலையில், ரயில்களிலும் ரயில் நிலைய வளாகங்களிலும் பட்டாசுகள், வெடிமருந்துகள், எரிவாயு உருளைகள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய அபாயகரமான பொருட்களைக் கொண்டு செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    3 ஆண்டுகள் சிறை

    இந்தத் தடையை மீறி ரயிலில் பட்டாசுகள் அல்லது வெடிபொருட்களைக் கொண்டு செல்பவர்கள் மீது இந்திய ரயில்வே சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம் என்று ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது.

    அதுமட்டுமல்லாமல், பட்டாசுகள் அல்லது வெடிபொருட்களால் ஏதாவது விபத்து ஏற்பட்டால், அதனால் ஏற்படும் சேதங்களுக்கும் சம்பந்தப்பட்ட நபரே முழுப் பொறுப்பேற்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரயில்களிலோ அல்லது ரயில் நிலையங்களிலோ பட்டாசுகள் கொண்டு செல்லப்படுவதை பார்த்தால், பயணிகள் உடனடியாக ரயில்வே உதவி எண் 139-ஐத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    சிசிடிவி கண்காணிப்பு

    இதனிடையே, தீபாவளி பண்டிகைக் காலத்தில் ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், இதை பயன்படுத்தி யாராவது சட்டவிரோதமாக வெடிபொருட்களைக் கொண்டு செல்கிறார்களா என்பதை கண்காணிக்க முக்கிய ரயில் நிலையங்களில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    மோப்ப நாய்களின் உதவியுடனும் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, தீபாவளிக்காக சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகள் ரயிலில் பட்டாசுகளைக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். பயணத்தின்போது பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவது அவசியம்.