செம்மரம்.. இப்போ மான் வேட்டை! ஆந்திரா, கர்நாடகாவில் கொத்து கொத்தாக சுட்டு கொல்லப்பட்ட தமிழர்கள்

  • சென்னை: ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தமிழர்கள் கொத்து கொத்தாக அம்மாநில போலீஸ், வனத்துறை அதிகாரிகளால் சுட்டு கொல்லப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 23 தமிழர்கள் இருமாநிலங்களிலும் சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

    Advertisement

    கர்நாடகாவிற்கும், தமிழகத்துக்கும் இடையே ஏற்கனவே காவிரி நீர் பங்கீடு செய்வதில் பெரிய பஞ்சாயத்து உள்ளது. இதற்கிடையே தான் கர்நாடகாவில் தற்போது நடந்து இருக்கும் சம்பவம் தமிழர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

    Advertisement

    கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டம் தமிழகம் - கர்நாடகா எல்லையோர மாவட்டமாகும். ஈரோடு மாவட்டமும், சாம்ராஜ் நகர் மாவட்டமும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன.

    சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் மான் வேட்டையாடிய புகாரில் 3 தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷாக்யா எனும் பகுதியின் அருகே ஹேலேமுரிதட்டி வனப்பகுதியில் நேற்று காலையில் வனத்துறையினர் அந்தோணி சாமி, பீட்டர் மற்றும் குமார் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இவர்கள் ஹனூர் அருகே தொமியார்பாளையா கிராமத்தில் வசித்து வருவதும் அவர்கள் தமிழர்கள் என்பதும் தெரியவந்தது.

    Advertisement

    இவர்கள் 3 பேர் உள்பட மொத்தம் 4 பேர் மான் வேட்டையாடி இறைச்சியுடன் சென்றதாகவும், அவர்களை கைது செய்ய முயன்றபோது நாட்டு துப்பாக்கியால் சுட்டதாகவும் கர்நாடகா வனத்துறை கூறியுள்ளது. இதனால் தற்காப்புக்காக சுட்டதில் 3 பேர் பலியான நிலையில் ஒருவர் எஸ்கேப்பானதாக வனத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் குற்றச்சாட்டை இறந்த 3 பேரின் உறவினர்கள் மறுத்துள்ளனர். அதோடு போராட்டம் செய்து வனத்துறை அலுவலகத்தை சூறையாடி உள்ளனர்.

    இந்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். என்கவுண்ட்டர் செய்த வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன.

    Advertisement

    இந்த சம்பவம் கர்நாடகா - தமிழகம் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேவேளையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் தமிழர்கள் என்கவுண்ட்டர் என்ற பெயரில் கொத்து கொத்தாக சுட்டுக்கொல்லப்படுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த சம்பவங்கள் நடக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் இதுபோன்ற கோர சம்பவம் நடந்துள்ளது.

    முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ம் தேதி ஆந்திராவில் 20 தமிழர்கள் அம்மாநில போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். அன்றைய தினம் அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் ஆந்திராவில் 20 தமிழர்கள் அம்மாநில போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் சேஷாசலம் ரிசர்வ் வனப்பகுதிக்குள் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி மண்டல் ஏரிாவில் சீலமாகுலகுண்டா மற்றும் எட்டமாகுலகுண்டா ஆகிய பகுதிகளில் நடந்தது.

    Advertisement

    தமிழகத்தில் இருந்து ஆந்திரா சென்று செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்தியதாக கூறி அவர்கள் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இறந்த 20 தமிழர்கள் 8 பேர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 8 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 4 பேர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    ஆந்திர மாநிலத்தில் செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு பிரிவவை சேர்ந்த போலீசார் இந்த என்கவுண்ட்டரை செய்தனர். இவர்கள் செம்மரங்களை வெட்டி, கடத்தும் கும்பலை பிடிக்க சென்றபோது அவர்கள் தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். சரணடையும்படி போலீசார் கூறிய நிலையில் தங்கள் மீது கற்களை வீசிவிட்டு ஓட முயன்றதும், தற்காப்புக்காக என்கவுண்ட்டர் செய்ததில் 20 தமிழர்கள் இறந்ததாக தெரிவித்தனர்.

    Advertisement

    இந்த சம்பவம் தமிழகத்தையே கொந்தளிக்க செய்தது. அதன்பிறகு இப்போது கர்நாடகாவில் மான் வேட்டையாடிய புகாரில் வனத்துறையினர் 3 தமிழர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர். கடந்த 11 ஆண்டுகளில் ஆந்திரா, கர்நாடகாவில் மட்டும் 23 தமிழர்கள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்பது சோகமான விஷயமாகும்.

    English Summary

    Andhra Pradesh and Karnataka where Tamils are being shot dead in large numbers by state police and forest department officials. In the last 11 years alone, a total of 23 Tamils have been shot dead across these two states.