சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் மீனவர்கள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டத்தில் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ 1200 கோடியில் 15 மாடிகளை கொண்ட புதிய தலைமைச் செயலகத்தை கட்டுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதுமே பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த மீனவ மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களின் பாரம்பரிய மீன்பிடி தொழில் மற்றும் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என அவர்கள் அச்சம் தெரிவித்தனர். இந்த நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது என்ற தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரி மீனவர்கள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முள்ளிக்குப்பம், முள்ளிமா நகர், மயிலை பகுதி, சீனிவாசபுரம் பகுதி என அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை சார்பில் மீனவர்கள் சீனிவாசபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குவிந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை முதலே அந்த பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டம் நடத்தும் இடத்தில் ஷாமியானா பந்தல் போடப்பட்டது. அங்கு கருப்பு நிற கொடியேற்றப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டவர்கள் மட்டுமல்லாமல் அக்கம்பக்கத்து மீனவ கிராம மக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக திடீரென ஒரு மூதாட்டி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அவரது உறவினர்கள் தூக்கிக் கொண்டு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவ சபையின் நிர்வாகிகள் தமிழக அரசுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மீனவர்கள் கருப்பு கொடி ஏந்தி பேரணியும் நடத்தப்பட்டது.