வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்?

  • சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தொடங்கிய அதிமுக உட்கட்சி மோதல், தற்போது தினமும் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கும், சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிருப்தி அணிக்கும் இடையிலான மோதல், அக்கட்சியை முழுமையாக உலுக்கியுள்ளது. இந்த சூழலில், சி.வி.சண்முகம் அணியில் இருந்த மேலும் 5 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது, அதிமுகவில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதேநேரத்தில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது.

    Advertisement

    ஆனால் தனிப்பெரும்பான்மை இல்லாததால், காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியை அமைத்தது. தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் அதிருப்தி அதிகரிக்கத் தொடங்கியது.

    அதிமுக பிளவு

    தொடர்ந்து தோல்வி, ஒருதலைப்பட்ச முடிவுகள், மாவட்டச் செயலாளர் பதவி நீக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் தனி அணியாக செயல்படத் தொடங்கினர். அதன் உச்சமாக, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக கொறடா உத்தரவை மீறி 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி

    இதற்கு பதிலடியாக, எடப்பாடி பழனிசாமி கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரின் ஆதரவாளர்களை முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கினார். அதன்பிறகு அதிமுகவில் மோதல் மேலும் தீவிரமடைந்தது. இந்தநிலையில், தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த சண்முகம் - வேலுமணி அணியினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    எஸ்பி வேலுமணி

    கட்சித் தாவல் தடைச் சட்டம் உள்ளிட்ட சட்ட சிக்கல்கள் காரணமாக, அவர்களுக்கு அமைச்சரவை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அதிகரித்த நிலையில், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா, பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

    Advertisement

    5 எம்எல்ஏக்கள்

    இந்த சம்பவம் அதிமுகவுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது சி.வி.சண்முகம் அணியில் இருந்த மேலும் 5 எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு திரும்பியிருப்பது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதன்படி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், திருத்தணி எம்எல்ஏ அரி, புவனகிரி எம்எல்ஏ அருண்மொழித்தேவன், பழனி எம்எல்ஏ ரவி மனோகரன் மற்றும் ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

    சி.வி.சண்முகம்

    இந்த சந்திப்பு அதிமுகவில் எடப்பாடிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. ஏற்கனவே வேலுமணி அணியில் இருந்த சிலர் மீண்டும் இபிஎஸ் அணிக்கு திரும்பிய நிலையில், தற்போது சி.வி.சண்முகம் அணியிலிருந்தும் எம்எல்ஏக்கள் வெளியேறத் தொடங்கியிருப்பது, அந்த அணிக்கு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. அதேசமயம், இன்னும் சில முக்கிய தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை என்பதும் கவனிக்கப்படுகிறது.

    Advertisement

    லீமா ரோஸ்

    எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், காமராஜ், அன்பழகன், மரகதம் வெற்றிவேல், சேகர், ராகேஷ், விஜயபாஸ்கர், வீரமணி, லீமா ரோஸ் உள்ளிட்டோர் இன்னும் தனிப்பட்ட முறையில் எந்த நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால், அதிமுகவில் அடுத்த சில நாட்களில் மேலும் பல முக்கிய மாற்றங்கள் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது. ஒருபுறம் தவெக தனது தனிப்பெரும்பான்மை இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க, மறுபுறம் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவை மீண்டும் பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    EPS regains momentum as five MLAs from CV Shanmugam faction reportedly shift support back to him.