டெல்லி: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நயாரா எனர்ஜி நிறுவனத்தின் வாடினார் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எகிப்து வழியாக ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிபொருளை மாற்றி, ரகசியக் கப்பல்கள் மூலம் 9 லட்சம் பீப்பாய்களில் 1 லட்சம் டன் பெட்ரோலை ரஷ்யாவுக்கு இந்தியா இதுவரை ஏற்றுமதி செய்தது. உலக பொருளாதார தடைக்கு மத்தியில் இது ரஷ்யா எல்லையை சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவில் எவ்வளவு தான் எண்ணெய் வளம் இருந்தாலும், அதனைசுத்திகரித்து பெட்ரோலோக பயன்படுத்த வேண்டும் என்றால் சுத்திகரிப்பு நிலையங்கள் சரியாக செயல்பட வேண்டும். ஆனால் அங்கு நடப்பது வேறாக உள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையே 4 ஆண்டுகளுக்கு மேலாக போர் தாக்குதல் நீடித்து வருவதால் பதற்றமான நிலை நீடிக்கிறது. அத்துடன் உக்ரைன் நடத்திய தொடர் டிரோன் தாக்குதல்கள் காரணமாக, ரஷ்யாவின் உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா நாட்டில் உள்ள அரசு சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டதால், நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இன்னும் நிலைமை சரியாகவில்லை..ரஷ்யா மீண்டும் பழைய நிலைக்கு வர 6 மாதங்கள் வரை ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சூழலில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்யை வாங்கி பயன்படுத்தி வரும் இந்தியா, ரஷ்யாவின் தேவைக்காக அதனை சுத்திகரித்து அனுப்பும் வேலைகளையும் செய்து வருகிறது. இதன் காரணமாக வரலாற்றில் முதன்முறையாக ரஷ்யா, இந்தியாவிலிருந்து கடல் வழியாக பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியிருக்கியிருக்கிறது. ரஷ்யாவில் சுத்திகரிப்பு நிலையங்கள் சரி செய்துவிட முடியாத நிலை இருப்பதால், அந்நாடு தனது தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வாங்குகிறது. கச்சா எண்ணெய்யை கொடுத்த பெட்ரோலை வாங்கும் தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளது. உலகளவில் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருவதால் ரஷ்யா பரிதவித்து வந்தது. இத்தகைய சூழலுக்கு மத்தியில் இந்தியா ரஷ்யாவுக்கு ரகசியமாக பெட்ரோலை ஏற்றுமதி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நயாரா எனர்ஜி நிறுவனத்தின் வாடினார் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எகிப்து வழியாக ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிபொருளை மாற்றி, ரகசியக் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. கப்பல் போக்குவரத்துத் தரவுகளின்படி, முதற்கட்டமாக 42 ஆயிரம் டன் பெட்ரோல் அடங்கிய முதல் கப்பல் ரஷ்யாவைச் சென்றடைந்துள்ளது.. அதைத் தொடர்ந்து மற்றொரு கப்பல் மூலம் 68 ஆயிரம் டன் பெட்ரோல் ரஷ்யாவின் ஆர்க்டிக் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது. மொத்தம் 9 லட்சம் பீப்பாய்கள் மூலமாக மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரம் டன் பெட்ரோல் இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக உலகளாவிய புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. ரஷ்யாவுக்கும் இந்தியாவிற்கும் உள்ள நட்பு பல ஆண்டுகளாக தொடரும் நிலையில், அதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறது.