சென்னை: நாங்கள் மீனவர்கள், கடலை ஒட்டிதான் வசிப்போம். தலைமைச் செயலகம் வேற எங்கயாவது கட்டட்டும், நாங்கள் காலி செய்ய மாட்டோம் என பட்டினம்பாக்கம் பகுதி மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது: பட்டினம்பாக்கத்தில் நாங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இங்கு தலைமைச் செயலகம் கட்டினால் நாங்கள் எங்கே செல்வது? நாங்கள் மீனவ மக்கள், கடற்கரைக்கு அருகேதான் இருக்க முடியும்.
அப்போதுதான் எங்களால் மீன்பிடித் தொழிலை செய்ய முடியும். கரையில் நிறுத்தியிருக்கும் படகுகளை பாதுகாப்பது, கடலில் யாராவது தவறிவிழுந்துவிட்டால் அவர்களை காப்பாற்றுவது உள்ளிட்டவைகளை நாங்கள் செய்து வருகிறோம். அதற்கு கடலோரத்தில் நாங்கள் குடியிருந்தால்தான் எதையும் துரிதமாக செய்ய முடியும். இங்கிருந்தால்தான் எங்களுக்கு வாழ்வாதாரம் இருக்கிறது. ஒரு 10 ரூபாய், 50 ரூபாய், 500 ரூபாய் கிடைக்கும், 1000 ரூபாய் ரொம்ப அரிதாக கிடைக்கும். அப்படியிருக்கும் போது எங்களை விரட்டிவிட்டுவிட்டு தலைமைச் செயலகம் கட்டினால் எப்படி, நாங்கள் இந்த இடத்தை விட்டு காலி செய்ய மாட்டோம், போராடுவோம், வேறு எங்காவது தலைமைச் செயலகத்தை கட்டிக் கொள்ளட்டும் என பட்டினம்பாக்கம் பகுதி மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் சுமார் 1200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வளாகத்தை கட்ட தமிழக அரசு 26 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டுள்ளது. இதற்கான அரசாணையும் நேற்று வெளியானது. பட்டினப்பாக்கத்தின் ஃபோர்ஷோர் எஸ்டேட் குடியிருப்புகள் மற்றும் விளையாட்டு மைதானப் பகுதிகள் உள்ளிட்ட 25.16 ஏக்கர் நிலமும், வருவாய்த்துறை ஆவணங்கள் மூலம் கண்டறியப்பட்ட 1.2 ஏக்கர் நிலமும் சேர்க்கப்பட்டு மொத்தம் 26.36 ஏக்கர் நிலப்பரப்பு இத்திட்டத்திற்காக முழுமையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதிய தலைமைச் செயலகம் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு 350 மீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கு தலைமைச் செயலகம் வந்துவிட்டால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதை சரி செய்ய சென்னை லைட்ஹவுஸ் முதல் அடையாறு திருவிக பாலம் வரை 3.5 கி.மீ. தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் இந்த இடம் மெரினா வணிக மையம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த குடியிருப்புவாசிகளை வெளியேற்றுவது தொடர்பாக தொடரப்பட்ட பல்வறு வழக்குகள் காரணமாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. அண்மையில் இந்த வழக்குகளை முடித்து வைத்த சென்னை ஹைகோர்ட், வீட்டு வசதி வாரிய குடியிருப்புவாசிகளுக்கு மாற்று இடம் வழங்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து நிலப்பிரச்சனைகள் முடிவுக்கு வந்தன. தற்போது இந்த இடத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.