அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்!

  • சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-வும், ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபி-யுமான ஆர்.நடராஜ் தவெகவில் இணைந்துள்ளார். அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் அவர் தவெகவில் இணைந்தார்.

    Advertisement

    ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான ஆர் நடராஜ், தமிழ்நாட்டில் டிஜிபியாக பணியாற்றினார். கடந்த 2011 மார்ச் 31 ஆம் தேதி டிஜிபி அந்தஸ்தில் தீ மற்றும் மீட்பு சேவைகள் துறையின் தலைவராக ஓய்வு பெற்றார். இவர் 1975ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். தமிழ்நாடு மற்றும் மத்திய அரசில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். டிஎன்பிஎஸ்சி தலைவராகவும் செயல்பட்டார்.

    Advertisement

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டில் நடராஜ் அதிமுகவில் சேர்ந்தார். அதைத்தொடர்ந்து, 2015ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் வேறொரு நடராஜுக்கு பதிலாக இவரை நீக்கிவிட்டதாக கூறி மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் சரியான நேரத்தில் திறந்து விடாததால் சென்னை நகரத்திற்கு பேரழிவு ஏற்பட்டது என்றும், சம்மபந்தபட்ட அதிகாரிகள் சரியான நேரத்தில் முதலமைச்சருடன் தொடர்புகொள்ள முடிந்திருந்தால், இந்த அழிவை தடுத்திருக்கலாம் என்றும், அரசியல் விமர்சகர் நடராஜ் என்பவர் கூறியதை செய்தி தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டது.

    Advertisement

    ஆனால் இந்த கருத்தை தெரிவித்த நடராஜ் புகைப்படத்திற்கு பதிலாக முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ் புகைப்படத்தை அந்த தொலைக்காட்சி தவறுதலாக வெளியிட்டது. இதனால் முன்னாள் டிஜிபி நடராஜை கட்சியில் இருந்து நீக்கியதாக அதிமுக தலைமை அறிவித்தது. இதையடுத்து உண்மை வெளிவந்த நிலையில் அவர் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

    2016 சட்டசபை தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் நடராஜ் 14,728 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். மீண்டும் 2021 சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆர் நடராஜ் அங்கு களமிறங்கினார். அப்போது அவர் திமுக வேட்பாளர் மயிலை வேலுவிடம் தோற்றார். 12,633 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார் நட்ராஜ்.

    Advertisement

    இந்நிலையில், பெரிதாக அரசியல் களத்தில் செயல்படாமல் இருந்து வந்த நட்ராஜ், தற்போது தவெகவில் இணைந்துள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் நடராஜ்.

    இந்த நிகழ்வில் பேசிய தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், "காவல்துறையில் உயர் பதவி வரை சென்று, பின்னர் சமூக சேவையில் ஈடுபட்ட நடராஜ் அவர்களின் அனுபவம் நமது கட்சிக்கு பலம் சேர்க்கும். அவரை வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

    அவரைத் தொடர்ந்து பேசிய ஆர். நடராஜ், "தமிழக மக்களின் நலனுக்காகவும், நல்லுறவான ஆட்சி அமைப்பிற்காகவும் த.வெ.கவின் கொள்கைகள் சிறப்பாக உள்ளன. பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களின் தூய்மையான அரசியல் பயணத்தில் பங்கெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறினார்.

    Advertisement

    தமிழக காவல் துறையில் பல ஆண்டுகளாக உயர் பதவிகளை வகித்து, டிஜிபி பதவி வரை எட்டிய நடராஜ், பின்னர் அதிமுகவில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த இவர், தேர்தலுக்கு முன்பே தவெகவில் இணைவார் என்றும், அப்படி இணைந்தால் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் ஏற்கனவே பரவலாகப் பேசப்பட்டது. தற்போது அவர் தவெகவில் இணைந்திருப்பது, கட்சிக்கு பெரும் வலு சேர்க்கும் என கருதப்படுகிறது.

    English Summary

    R Nataraj, a former AIADMK MLA and retired DGP, has joined the TVK. He joined the party in the presence of Minister N. Anand.