முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.. பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்!

  • சென்னை: முதலமைச்சர் பெயரை மாற்றி கூறி பின்னர் சுதாரித்துக்கொண்டு மாற்றினார் முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த பிறகும், பழக்க தோஷத்தில் எடப்பாடி பழனிசாமி பெயரைக் குறிப்பிட்டு பிறகு திருத்திக் கொண்டார்,

    Advertisement

    செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், அண்மையில் அதிமுகவில் இருந்து விலகி, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இந்நிலையில் மரகதம் குமரவேல் ஏற்பாட்டில், மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஓட்டல் ஹைவே இன் எதிரே, இன்று மாலை தமிழக வெற்றி கழகத்தில் மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணையும் விழா நடைபெற்றது.

    Advertisement

    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும் தவெக பொது செயலாளருமான புஸ்ஸி என்.ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும் தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரும் தவெக தலைமை கழக ஒருங்கிணைப்பாளருமான கே.ஏ.செங்கோட்டையன், மனிதவள மேலாண்மை துறை அமைச்சரும் செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட தவெக செயலாளருமான த.சரத்குமார், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தவெக செயலாளர் எம்.எஸ்.பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்வில் அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 25 ஆயிரம் பேர் தவெகவில் இணைவதாக அறிவிக்கப்பட்டது. இந்த இணைப்பு விழாவுக்காக, அப்பகுதியில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு, அங்கு 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. எனினும், ஏராளமான இருக்கைகள் காலியாகவே இருந்தன.

    Advertisement

    இந்தக் கூட்டத்தில் பேசிய மரகதம் குமரவேல், "சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயன்றதாக குற்றம்சாட்டினார். அதிமுகவில் குதிரை பேரத்தை எடப்பாடி பழனிசாமி தான் நடத்தினார் என்றும் விமர்சித்தார்.

    மேலும், "எனக்கு பெயர் வைத்தவர் எம்ஜிஆர்" என குறிப்பிட்ட மரகதம் குமரவேல், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தனபால் தொண்டர்களுக்கு ஒரு டீ கூட வாங்கி கொடுக்க மாட்டார் என்றும், ஆனால் ரூ.20 கோடி கொடுத்து ராஜ்யசபா உறுப்பினர் பதவி பெற்றதாகவும் விமர்சித்தார்.

    மரகதம் குமரவேல் பேசும்போது, முதலமைச்சர் விஜய் எனச் சொல்வதற்கு பதிலாக பழக்கதோஷத்தில் எடப்பாடியார் எனக் குறிப்பிட்டு பின்னர் தளபதி என மாற்றினார். மரகதம் குமரவேல் பேசுகையில், "ஜெயலலிதா எப்படி பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தாரோ அதேபோல்தான் மாண்புமிகு முதல்வர் அண்ணன் எடப்பாடியார்... மாண்புமிகு முதல்வர் தளபதி முதல் கையெழுத்தாக..." எனப் பேசினார்.

    English Summary

    Former MLA Maragatham Kumaravel initially mentioned the wrong name for the Chief Minister but quickly corrected herself. Even after leaving the AIADMK and joining the TVK, she mentioned Edappadi Palaniswami's name out of habit before rectifying the error.