அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!

  • சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.வில் உருவான உட்கட்சிப் பிரச்சனை தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் தோல்வியால் ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த அக்கட்சி, தற்போது எடப்பாடி பழனிசாமி அணி, எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் அணி, மேலும் தவெகவில் இணைந்த எம்.எல்.ஏக்கள் என மூன்று திசைகளில் சிதறி நிற்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், தாங்கள் அவசரப்பட்டு விட்டோமோ என தங்களது ஆதரவாளர்களிடம் 3 மாஜி எம்.எல்.ஏ.க்கள் புலம்பியதாகச் சொல்லப்படுகிறது.

    Advertisement

    2026 தேர்தலில் அ.தி.மு.க. வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவது குறித்து கட்சிக்குள் கடும் அதிருப்தி ஏற்பட்டது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் போர்க் கொடி தூக்கினர்.

    Advertisement

    "கட்சியில் ஒருதலைப்பட்ச முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது ஆலோசனை இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தனி அணியாக செயல்பட தொடங்கினர்.

    அதிமுக பிளவு

    இந்த மோதலின் உச்சமாக, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் கட்சியின் கொறடா உத்தரவை மீறி தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதுவே அ.தி.மு.க.வில் பிளவை வெளிப்படையாக காட்டிய சம்பவமாக மாறியது. முதலில் இந்த 25 பேருக்கும் தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த சிலர் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து இருந்ததாகவும் கூறப்பட்டது.

    Advertisement

    எஸ் பி வேலுமணி

    ஆனால், கட்சித் தாவல் தடைச் சட்டம் உள்ளிட்ட சட்ட சிக்கல்கள் காரணமாக அவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், வேலுமணி அணிக்குள் கடும் ஏமாற்றம் ஏற்பட்டது. அந்த அதிருப்தியின் மத்தியில் தான் மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை திடீரென ராஜினாமா செய்தனர்.

    3 பேர் ராஜினாமா

    மூவரும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கிய கையோடு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இந்த சம்பவம் அதிமுகவிலும், வேலுமணி அணியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இடைத்தேர்தலில் மீண்டும் சீட் கிடைக்குமா? அமைச்சர் பதவி கிடைக்குமா? என்ற சந்தேகம் தற்போது அந்த 3 பேரிடமும் உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    Advertisement

    இடைத்தேர்தல்

    இதனால், "நாம் அவசரப்பட்டு விட்டோமோ?" என்ற மனநிலையில் அவர்கள் இருப்பதாகவும், தங்களது ஆதரவாளர்களிடமும் அதுபோன்ற கருத்துகளை பகிர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பாகவே த.வெ.க. தரப்பில் இருந்து சில அதிமுக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இடைத்தேர்தலில் சீட் அல்லது வாரிய தலைவர் பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    எடப்பாடி பழனிசாமி

    இதே நேரத்தில், வேலுமணி அணியில் இருந்த சில எம்.எல்.ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். ஆற்காடு சுகுமார், அந்தியூர் ஹரிபாஸ்கர், சங்கரன்கோவில் திலீபன் ஜெய்சங்கர் உள்ளிட்ட 5 பேர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக மன்னிப்பு கடிதமும் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், வேலுமணி அணியின் பலம் தற்போது 17 ஆக குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    ரகசிய பேச்சுவார்த்தை

    இந்த சூழலில், அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை சரிசெய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பும், வேலுமணி தரப்பும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை நகரில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகி ஒருவரின் இல்லத்தில் இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.

    நிபந்தனைகள்

    அந்த பேச்சுவார்த்தையில், தேர்தல் ஆணையத்தில் இருதரப்பும் அளித்த மனுக்களை வாபஸ் பெறுவது, சபாநாயகரிடம் கொடுத்த தகுதி நீக்க மனுக்களை திரும்ப பெறுவது, எடப்பாடி பழனிசாமி நீக்கிய 36 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மீண்டும் அதே பொறுப்புகளை வழங்குவது போன்ற நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    வழிகாட்டுதல் குழு

    மேலும், அ.தி.மு.க.வில் ஒரு வழிகாட்டுதல் குழு அமைத்து, அதன் ஆலோசனையின் அடிப்படையில் பொதுச்செயலாளர் செயல்பட வேண்டும் என்றும் வேலுமணி தரப்பு கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பு "முதலில் மன்னிப்பு கடிதம் வேண்டும்" என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தமிழக வெற்றிக் கழகம்

    இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகமும் இந்த அரசியல் குழப்பத்தை கவனமாக பயன்படுத்தி வருகிறது. மேலும் சில அதிமுக எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்துவர முயற்சிகள் நடைபெறுவதாகவும், ஒருவேளை இடைத்தேர்தல் ஏற்பட்டால் அந்த தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை உறுதி செய்யும் திட்டத்தில் தவெக செயல்பட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    English Summary

    Three former AIADMK MLAs reportedly rethink their move to TVK amid uncertainty over bypoll tickets and future roles.