29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன?

  • சென்னை: அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் பழைய பொறுப்புகளை கொண்டு விளம்பரப்படுத்தி கொள்ள கூடாது என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலமாக எஸ்பி வேலுமணி, அன்பழகன், காமராஜ் உள்ளிட்டோருக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி அளிக்கப்படாது என்பதை மறைமுகமாக எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பதாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    சட்டசபைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அதிமுக இழந்த நிலையில், அக்கட்சியில் பிளவு ஏற்பட்டது. எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோர் தலைமையில் சுமார் 25 எம்எல்ஏ-க்கள் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். இதன்பின் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவர்களின் மாவட்டச் செயலாளர்கள் பதவி பறிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    Advertisement

    இன்னொரு பக்கம் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகி வந்தார். இதனால் எஸ்பி வேலுமணி தரப்பு சுமூக பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதனிடையே சிலர் எஸ்பி வேலுமணி அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினர். 4 எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினர்.

    தொடர்ந்து நேற்று முன்தினம் எஸ்பி வேலுமணி அணியினர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். எஸ்பி வேலுமணி அணி தரப்பில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பக்கம் வருவதற்கு சில டிமாண்ட்கள் வைக்கப்பட்டது. தங்களின் பதவிகள் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்பது அந்த டிமாண்டில் ஒன்றாகும். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    Advertisement

    அந்த அறிக்கையில், அதிமுக பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் பழைய பொறுப்புகளை கொண்டு பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டாம் என்று அதிமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பி வேலுமணி அணிக்கு ஆதரவாக இருந்த 29 மாவட்டச் செயலாளர்களின் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்திருந்தார்.

    இந்த அறிக்கையின் மூலமாக மீண்டும் அவர்களுக்கு பதவிகள் அளிக்கப்படாது என்பதை எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக கூறி இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக அதிமுகவில் புதியவர்கள் பவர் செண்டராக உருவாக இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் எஸ்பி வேலுமணி அணியினர் மீது எடப்பாடி பழனிசாமி இன்னும் கோபத்திலேயே இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.

    English Summary

    Former AIADMK Office-Bearers Banned from Using Old Titles, So Edappadi sidelined SP Velumani and other Seniors Permanently?