சென்னை: பாஜகவில் இருந்து வெளியேறி உள்ள புதிய இயக்கத்தை அண்ணாமலை தொடங்கி உள்ளார். இந்நிலையில் அண்ணாமலையின் இந்த இயக்கத்தில் சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் இணைவதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது தமிழகத்தில் டிஜிபியாக பணியாற்றி வரும் சீமா அகர்வாலின் கணவரான இந்த ஏகே விஸ்வநாதன் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை. இவர் கடந்த வாரம் பாஜகவில் இருந்து விலகினார். இதையடுத்து புதிய இயக்கத்தை தொடங்கி உள்ளார். We the leader எனும் இயக்கத்தை தொடங்கி உள்ளார். இதற்கான அறிவிப்பை கடந்த 5ம் தேதி அண்ணாமலை அறிவித்தார். மேலும் விரைவில் இந்த இயக்கம் அரசியல் கட்சியாக செயல்படும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதையடுத்து அண்ணாமலையின் இயக்கத்தில் அவரது ஆதரவாளர்கள், இளைஞர்கள் சேர்ந்து வருகின்றனர். இன்று மாலை 4 மணி நிலவரப்படி அண்ணாமலையின் இயக்கத்தில் மொத்தம் 17 லட்சத்து 31 ஆயிரம் பேர் இணைந்திருந்திருந்தனர். தொடர்ந்து பலரும் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் அண்ணாமலையின் இயக்கத்தில் பாஜகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் அடுத்தடுத்து இணைந்து வருகின்றனர். மேலும் பிற கட்சிகளின் பிரமுகர்களும் விரைவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையை அண்ணாமலை தரப்பு தொடங்கி உள்ளது. அந்த வகையில் அண்ணாமலையின் இயக்கத்தில் தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும், சென்னையின் முன்னாள் போலீஸ் கமிஷனருமான ஏகே விஸ்வநாதன் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ஏகே விஸ்வநாதனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் ஏகே விஸ்வநாதன் அண்ணாமலையின் இயக்கத்தில் இணைவது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாமலையின் இயக்கத்தில் இணைய தயாராகி வரும் இந்த ஏகே விஸ்நாதன் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு வயது 61. இவர் 1990 பேட்ச்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். 31 ஆண்டுகள் வரை தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக வெவ்வேறு பொறுப்புகளில் பணியாற்றி கடந்த 2024ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் மதுரை சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றினார். அதன்பிறகு திருநெல்வேலியில் பணியாற்றியபோது தென்காசியி்ல் நடந்த ஜாதிய ரீதியிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் முக்கிய பங்காற்றினார். இவர் கடந்த 2024ம் ஆண்டில் டிஜிபியாக பணி ஓய்வு பெற்றார். அப்போது அவர் தமிழ்நாடு காவல் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றி இருந்தார். 1998 ல் கோவைகுண்டுவெடிப்பில் அமைக்கப்பட்ட மாநில சிறப்பு விசாரை குழுவில் எஸ்பியாக பணியாற்றி இருந்தார். பிறகு 5 ஆண்டுகள் சிபிஐயில் பணியாற்றினார். 2006ல் மீண்டும் தமிழக பணிக்கு திரும்பியவர் உளவுத்துறை டிஐஜியாக செயல்பட்டார். லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஜியாக பணியாற்றியவர். சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனராக பணியாற்றினார். இவர் சென்னை போலீஸ் கமிஷனராக 3 ஆண்டுகள் வரை பணியாற்றினார். 2017 மே 15 முதல் 2020 ஜூலை 1ம் தேதி வரை சென்னை காவல் ஆணையராக பணியாற்றி இருந்தார். கடைசியாக டிஜிபியாக பணி ஓய்வு பெற்றார். இவர் தமிழ்நாடு காவல் வீட்டு கார்ப்பரேஷன் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ஜூலை 31ம் தேதி ஓய்வு பெற்றார். இவரது மனைவி பெயர் சீமா அகர்வால். இவர் தற்போது தமிழகத்தில் டிஜிபியாக பணியாற்றி வருகிறார். இவரது பெயர் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி (தமிழ்நாடு காவல்துறை தலைவர்) பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் சீமா அகர்வாலுக்கு அந்த பதவி கிடைக்கவில்லை. தற்போது சீமா அகர்வால் டிஜிபி அந்தஸ்தில் தமிழ்நாடு தீ மற்றும் பாதுகாப்ப சேவைகளி்ன பிரிவின் இயக்குநராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.