திண்டுக்கல்: ரேஷன் கடைகளுக்காக கிலோவுக்கு ரூ. 77.89 என்ற விலையில் தவெக அரசு துவரம் பருப்பைக் கொள்முதல் செய்துள்ளது. இது முந்தைய திமுக ஆட்சியில் கிலோவுக்குச் செலுத்தப்பட்ட ரூ. 109.15 என்ற விலையை விடச் சுமார் ரூ. 31 (29%) குறைவாகும். இதன் மூலம் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தமிழக அரசுக்கு ரூ. 187.56 கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆங்கில நாளேடு ஒன்றில் இன்று செய்தி வெளியாகியது. இந்த செய்தியை திட்டவட்டமாக திமுக முன்னாள் அமைச்சர் சக்கரபாணி மறுத்துள்ளார்.
கடந்த 2021 -26 திமுக ஆட்சியில் உணவுப்பொருட்கள் துறை அமைச்சராக இருந்தவர் சக்கரபாணி. முன்னாள் அமைச்சரான இவர் இன்று ஆங்கில நாளேட்டில் வந்துள்ள செய்திக்கு மறுப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "தி.மு.க. அரசைக் காட்டிலும் த.வெ.க. அரசில் குறைந்த விலையில் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என இன்றைய ஆங்கில நாளேட்டில் உணவுப் பொருள் கொள்முதலின் எந்த அடிப்படைகளையும் கருத்தில் கொள்ளாத ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.
இது உண்மையென்றால், குறைந்த விலையில் கொள்முதல் செய்த TNCSC மேலாண் இயக்குநர் ஏன் மாற்றப்பட்டார்? எதிர்காலத்தில், வரத்து குறையும்போதும் இதே விலையில் கொள்முதல் செய்வோம் என அரசினால் உறுதியளிக்க முடியுமா? இனிமேல், கொள்முதல் விலை உயர்ந்தால் அப்போது அதில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டலாமா? துவரம் பருப்பைக் குறைந்த விலையில் கொள்முதல் செய்தவர்கள், பாமாயிலை மட்டும் ஏன் முன்பைவிட அதிக விலைக்குக் கொள்முதல் செய்தார்கள் என கட்டுரையை எழுதியவர் விளக்குவாரா? துறையின் அமைச்சர், த.வெ.க.வில் உள்ள பிற தலைவர்களே கூட செய்யத் துணியாத ஒரு அவதூறை ஆங்கில நாளேடு உண்மைகளைச் சரிபார்க்காமல் வெளியிடுவது ஊடக அறமாகுமா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதனிடையே பிரபல திமுக ஆதரவாளர் ஒருவர் வெளியிட்ட பதிவில், "தமிழ்நாடு அரசு செப்டம்பர் மாதம் எந்த வகையான துவரம் பருப்பை வாங்க உள்ளது என்பதை குறிப்பிடும் டெண்டர் இன்னும் பொதுவெளியில் வரவில்லை, 1. கடந்த திமுக ஆட்சியில் 2026 பிப்ரவரி மாதத்திலேயே ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.77.99-க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 2026 மே 2ம் தேதி (கடந்த ஆட்சியின் தொடர்ச்சி) ரூ.77.89-க்கு கொடுக்கப்பட்டுள்ளது. 2. அடுத்ததாக, 2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த கொள்முதல் விலையை, படிப்படியாக 2026 பிப்ரவரியில் ரூ.77.99 ஆகக் குறைத்ததும் திமுக அரசு தான். அதுவும் சுமார் ரூ.35 குறைத்துள்ளது. 3. தவெக ஆட்சியில் கடந்த 2026 ஆகஸ்ட் மாதம் வெளியான செய்தியில், ரூ.77.89-க்கு டெண்டர் விடப்பட்ட கனடா மஞ்சள் பருப்பு, 'முழு தோல் நீக்கப்பட்ட தரம்-2' தரத்திலான பருப்பை வழங்காமல், அதைவிட ரூ.10 குறைவான விலையுள்ள பருப்பு வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. 4. தமிழ்நாடு அரசு கனடா மஞ்சள் பருப்பை ரூ.77.89-க்கு(மே 2026) டெண்டர் எடுப்பது ஏற்கனவே நடைமுறையில் இருப்பது. கட்டுரையில் உள்ள விலையும் இதனுடன் ஒத்துப் போகிறது. 5. TUR DAL (SPLIT-HUSKED & FATKA - INDIGENOUS), TUR DAL (SPLIT - HUSKED - IMPORTED), CANADIAN YELLOW LENTIL (SPLIT - HUSKED & LAIRED No.2) ஆகிய 3 வகையான துவரம் பருப்புகள் அரசுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதில் Canadian Yellow Lentil (Split-Husked & Laired No.2) என்கிற வகைதான் ரூ.78 விலையில் உள்ளது. ஆனால், ஆங்கில நாளேடு கட்டுரையில் எந்த வகையான பருப்பு என்பது குறிப்பிடப்படவே இல்லை. தமிழ்நாடு அரசு செப்டம்பர் மாதம் எந்த வகையான துவரம் பருப்பை வாங்க உள்ளது என்பதை குறிப்பிடும் டெண்டர் இன்னும் பொதுவெளியில் வரவில்லை, கட்டுரையிலும் குறிப்பிடவில்லை. அதற்குள் ரூ.31 குறைந்ததாகவும், இதே நிலை தொடர்ந்தால் ரூ.750 கோடி அரசுக்கு மிச்சமாகும் என்றும் கற்பனையில் எழுதப்பட்ட கட்டுரைதான் இது" என்று கூறியுள்ளார்.