போலீசாருடன் நடந்த வாக்குவாதம்.. வேப்பேரி காவல் நிலையத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரான சேகர்பாபு!

  • சென்னை: சென்னையில் காவல்துறையினரை மிரட்டியதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதையேற்று, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இன்று வேப்பேரி காவல் நிலையத்தில் ஆஜர் ஆனார்.

    Advertisement

    திமுக ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக, தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

    Advertisement

    இந்தப் புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், கடந்த 26 ஆம் தேதி முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தரப்பில் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதையடுத்து, அன்பில் மகேஷ் அதேநாள் மாலை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் அமைந்தகரையில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, அவரை நவம்பர் 6 ஆம் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்ற கொடுத்த உத்தரவையடுத்து, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    இதற்கிடையே, அன்பில் மகேஷ், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்தபோது, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி உள்ளிட்ட ஏரளமான திமுகவினர் திரண்டிருந்தனர். அப்போது, சேகர்பாபு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதைத் தொடர்ந்து, சேகர்பாபு மீது கொலை மிரட்டல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை வேப்பேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான, விசாரணைக்கு ஆஜராக சேகர்பாபுவுக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

    இதையடுத்து, இன்று முன்னாள் அமைச்சர் சேகர்பாபு சென்னை வேப்பேரி காவல்நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். காவல்நிலையத்தில் ஆஜரானா சேகர்பாபுவிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

    English Summary

    Former DMK minister Sekar Babu was issued a summon to appear for questioning, following allegations that he had threatened police in Chennai. In compliance with this, the former minister appeared at the Vepery police station today.