பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா? தங்கம் தென்னரசு தாக்கு

  • சென்னை: "தெளிவாகத் தெரிந்து கொண்டே வாக்குறுதியைத் தந்து, "வாக்கு அறுவடை" முடிந்ததும் இப்போது ரிசர்வ் வங்கியை காரணம் காட்டி மறுப்பது விவசாயிகளை முற்றிலும் ஏமாற்றும் பச்சைத் துரோகம்" என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

    Advertisement

    பயிர்க்கடன் தள்ளுபடி பல்வேறு நிபந்தனைகளுடன் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததுபோல் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன்களை முற்றிலுமாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Advertisement

    அண்மையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த நிதி அமைச்சர் மரிய வில்சன், "தவெக ஆட்சியில் ஆர்பிஐ அறிவுறுத்தலின்படி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.

    விவசாயக் கடன் தள்ளுபடியை பொறுத்தவரை, 2021-ஆம் ஆண்டின் இறுதியில் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக, ஐந்தாண்டுகளில் அதை படிப்படியாக தவணை முறையில் நிறைவேற்றியது. 2024ல் ரிசர்வ் வங்கி ஒரு புதிய விதிமுறை சொல்லி இருக்கிறது. 45 நாட்களுக்கு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எங்களுக்கு நேரம் கொடுத்துள்ளனர். அதனையொட்டியே இந்த முடிவு எடுத்துள்ளோம்." எனத் தெரிவித்தார்.

    Advertisement

    இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள பதிவில், "தேனைத் தடவித் தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்போது வராத 'ரிசர்வ் வங்கி விதிமுறைகள்', மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்பில் உட்கார்ந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை வரும்போது மட்டும் எங்கே இருந்து திடுமெனக் குதித்து வருகின்றன? இது நிர்வாகத் திறமையின்மையா? இல்லை திட்டமிட்ட ஏமாற்று வேலையா?

    இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் நடைமுறைகளின்படி தான் "கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது" என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் அண்மையில் விளக்கம் சொல்லியிருக்கிறார். கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளவாறு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் என்பது கடந்த வருடம் 28.11.2025 அன்றே வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அந்த வழிகாட்டுதலை முழுமையாகத் தெரிந்து கொண்ட பின்னர்தான் 16.4.2026 அன்று தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், "ஐந்து ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். ஐந்து ஏக்கருக்கு மேல் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும்" என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆகவே, தெளிவாகத் தெரிந்து கொண்டே வாக்குறுதியைத் தந்து, "வாக்கு அறுவடை" முடிந்ததும் இப்போது ரிசர்வ் வங்கியைக் காரணம் காட்டி மறுப்பது விவசாயிகளை முற்றிலும் ஏமாற்றுவதாகும்.

    எனவே, தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிப்படி, இந்த அரசின் முதல் நிதி நிலை அறிக்கையிலேயே விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் அறிவிப்பினை வெளியிட வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை விவசாயிகளுக்கு வழங்கி அவர்களுக்கு நம்பிக்கையூட்டிவிட்டு, இப்போது அரைகுறையாக எந்த விவசாயிக்கும் பயனளிக்காத வகையில், பயிர்க்கடன் தள்ளுபடி செய்திருப்பதாக சொல்வது விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இழைக்கப்படும் "பச்சைத்" துரோகமாகும்!" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    “Deliberately making a promise while fully aware of the facts, and then reneging on it—citing the Reserve Bank as the reason—once the ‘harvest of votes’ is complete, constitutes a blatant act of betrayal that completely deceives the farmers,” criticized Thangam Thennarasu, a former DMK Minister.