சென்னை: "அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனாவையும், ராஜ்மோகனையும் ஓடவிட்டதுதான் தவெக அரசின் 100 நாள் சாதனை" என திமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பரந்தாமன் விமர்சித்துள்ளார்.
முதலமைச்ச்ர் விஜய் தலைமையிலான தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் நடந்த குற்றங்கள் தொடர்பான காணொளியை திமுக வெளியிட்டது. அதைத்தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் திமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பரந்தாமன்.
பரந்தாமன் பேசுகையில், "விஜய் தலைமையிலான சர்க்கஸ் சர்க்கார் ஆட்சியில் 100 நாட்களில் 546 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் பாதுகாப்பு நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா வச்சிருப்பேன் எனச் சொன்னார். ஆனால், இன்றைக்கு பெண்களுக்கான பாதுகாப்பு எந்த அளவில் தமிழ்நாட்டில் இருக்கிறது என நாட்டு மக்களுக்கே நன்றாகத் தெரியும். தவெக கட்சியில் இருக்கக்கூடிய பெண்களுக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத ஒரு பலவீனமான சர்க்காராகத்தான் இது இருக்கிறது. போதை கலாச்சாரத்திலிருந்து நம் இளைஞர்களை மீட்க வேண்டும். அவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு எனச் சொன்னார். ஆனால் போதை பழக்கமும் கடத்தலும் இங்கு தீவிரமாக இருக்கிறது. கல்லூரி வளாகத்தில் போதைப்பொருள் கடத்தப்படுகிறது, விற்கப்படுகிறது என்று காவல்துறைக்குத் தகவல் கொடுத்த கோவை கல்லூரி மாணவன் அமுதனுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத வெட்கக்கேடான சர்க்கஸ் சர்க்கார் அரசுதான் இந்த விஜய்யின் அரசு. இதற்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும். போதைப்பொருள் பற்றி தகவல் தந்த மாணவர்களுக்கே அவர்களால் பாதுகாப்பு தர முடியவில்லை. கொலை பழியை முதலமைச்சர் விஜய் ஏற்றுக்கொள்ள வேண்டும். போதைப்பொருள் பற்றி மாணவர் அளித்த ஒரு தகவலை கூட உங்களால் ரகசியமாக வைக்க முடியவில்லை. இளைஞர்களுக்கான அரசு என்று நீங்கள் மார்தட்டிக் கொள்கிறீர்கள். இளைஞர்கள் மூலமாகவே ஆட்சிக்கு வந்தேன் என்று சொல்கிற நீங்கள், ஒரு இளைஞன் குற்றம் நடைபெறுகிறது என்று காவல்துறைக்குச் சொன்ன ரகசியத்தைக் காப்பாற்றாத காவல்துறை. அப்படிப்பட்ட காவல்துறையை வைத்திருக்கும் உங்களுக்கு முதலமைச்சராக இருப்பதற்கு கொஞ்சமாவது தகுதி இருக்கிறதா? அமுதனுடைய தாயார் சொல்லுகிறார்கள், அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்று சொல்லுகிறார்கள் என்றால், ஆளுகிற அரசின் மீது இந்த நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திமுக மீதுதான் நம்பிக்கை இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. நேற்று திருவொற்றியூரில் இரண்டு அமைச்சர்களை ஓடவிட்டிருக்கிறார்கள். இந்த 100 நாள் சாதனை என்னவென்று சொன்னால், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோரை தலைதெறிக்க ஓட வைத்ததுதான் இந்த 100 நாள் சாதனை. இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக முதலமைச்சர் விஜய் இருக்கிறார். சினிமா படத்தில் நடிப்பது போல விஜய் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சியினரை கைது செய்யும் ஆர்வம், குற்றவாளிகளை கைது செய்வதில் இல்லையே? மத்திய அரசிடம் பம்மும் முதலமைச்சர், சட்டப்பேரவையில் பாயும் முதல்வராக இருக்கிறார். சட்டம் ஒழுங்கு பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முதல்வர் பதில் சொல்லாமல் ஓடி ஒளிகிறார். ஷாக் அடிக்கும் வகையில் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எதிர்க்கட்சி மீதுதான் நம்பிக்கை உள்ளது. 100 நாட்களில் ரூ. 15,000 கோடி முதலீடு வந்துள்ளதாக நிதி அமைச்சர் பொய்யான தகவல் கூறுகிறார். தவெக அமைச்சர்களுக்கு அடிப்படை புரிதல் இல்லை" எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.