'என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ வெள்ளத்துரை அதிமுகவில் இணைந்தார்.. யார் இவர்?

  • சென்னை: முன்னாள் போலீஸ் அதிகாரி 'என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்' வெள்ளத்துரை இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராக நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட வெள்ளைத்துரை இன்று அதிமுகவில் இணைந்தார்.

    Advertisement

    வெள்ளத்துரை, 'என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்'டாக அறியப்பட்டவர். கடந்த 2024ல் அவர் பணி ஓய்வு பெற்றார். 2026 சட்டசபை தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் சசிகலா கட்சி வேட்பாளராக போட்டியிட்ட வெள்ளைதுரை 1,048 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

    Advertisement

    அதிமுகவில் இணைந்த வெள்ளத்துரை

    அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து சசிகலாவை அக்கட்சியின் தலைவர் சக்கரவர்த்தி அண்மையில் நீக்கிய நிலையில், அக்கட்சி சார்பில் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்ட வெள்ளத்துரை, இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.

    அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று, நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டவரும், தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் S. வெள்ளைதுரை, Addl. Superintendent of Police (Retd.,) நேரில் சந்தித்து, தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    யார் இந்த வெள்ளத்துரை?

    கடந்த 1997 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் முதன்முதலில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை. பின்னர் திருச்சிக்கு மாறுதலாகி பாலக்கரை காவல் நிலையத்தில் 1998 ஆம் ஆண்டு பணிபுரிந்த போது கோ.சி ஜான் என்ற ரவுடி போலீசாரை தாக்கி தப்ப முயன்ற போது துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்தார்.

    அதன் பின் 2003 ஆம் ஆண்டு சென்னை அயோத்தி குப்பம் வீரமணி என்கவுண்டர், 2004 ஆம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பன் என்கவுண்டர் செய்த சிறப்பு அதிரடிப்படையில் இவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 12க்கும் மேற்பட்ட என்கவுண்டர்களை வெள்ளத்துரை நிகழ்த்தியுள்ளார்.

    Advertisement

    பணி ஓய்வுக்கு முந்தைய நாள் சஸ்பெண்ட்

    என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்பட்ட ஏடிஎஸ்பி வெள்ளத்துரை கடந்த 2024 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெறும் முந்தைய நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பாச்சேத்தியில் நடந்த காவல் மரண வழக்கில் அப்போதைய டிஎஸ்பியாக இருந்த வெள்ளத்துரை, பணி ஓய்வுக்கு முந்தைய நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் முன்னாள் ஏடிஎஸ்பி வெள்ளைதுரை போட்டியிட்டார். அதில் 1,048 வாக்குகள் மட்டுமே பெற்றார். இந்நிலையில், வெள்ளத்துரை இன்று தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.

    English Summary

    Former police officer and ‘encounter specialist’ Velladurai joined the AIADMK today. In the last Assembly election, Velladurai had contested from the Nanguneri constituency as a candidate for Sasikala’s party today, he has joined the AIADMK.