JCB மோதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மகன் உயிரிழப்பு.. சென்னையில் படித்து வந்தவருக்கு ஏற்பட்ட சோகம்!

  • சென்னை: மேலூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ பெரியபுள்ளான் என்ற செல்வத்தின் மகன் உலகாதிபதி இன்று சென்னையில் சாலை விபத்தில் பலியாகியுள்ளார். சென்னையில் படித்து வந்த எம்.எல்.ஏ மகன் ஜேசிபி மோதிய விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ பெரியபுள்ளான் என்கிற செல்வம். இவர் மேலூர் தொகுதியில் 2016 முதல் 2026 வரை 2 முறை சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. வாக இருந்தார். பெரியபுள்ளானுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி தனது கணவருடன் வசித்து வருகிறார். 2-வது மகள் படித்து வருகிறார். மகன் உலகலாபதி (வயது 21) சென்னையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    Advertisement

    இதற்காக உலகலாபதி சென்னை வேளச்சேரியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அறை எடுத்து தங்கியிருந்தார். தினமும் பைக்கில் கல்லூரிக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். வார விடுமுறை நாட்களில் தனது சொந்த ஊரான மேலூருக்கு சென்றுவிடுவார்.

    இந்நிலையில் இன்று காலை உலகலாபதி தனது பைக்கில் காலை 7.30 மணிக்கு கல்லூரிக்கு புறப்பட்டார். காந்தி மண்டபம் மேல்பாலத்தில் இருந்து கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். சர்தார் படேல் சாலையில் அமைந்துள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகே சென்ற போது போக்குவரத்து நெரிசலால் உலகலாபதி பிரேக் போட்டுள்ளார்.

    Advertisement

    அப்போது பின்னால் வேகமாக வந்த ஜே.சி.பி வாகனத்தின் முன்பகுதி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் நிலைகுலைந்த உலகலாபதி சாலையில் தவறி விழுந்தார். மோதிய வேகத்தில் பின்னால் வந்த ஜே.சி.பி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் உலகலாபதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்து குறித்து தகவலறிந்த மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உலகாதிபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Advertisement

    மேலூர் சட்டமன்ற தொகுதியில் 10 ஆண்டு காலம் எம்.எல்.ஏ.வாக இருந்த பெரியபுள்ளான் மகன் விபத்தில் இறந்தது மேலூர் மக்கள் மற்றும் அதிமுகவினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு பலியான உலகலாபதி உடல் மேலூருக்கு கொண்டு வரப்பட உள்ளது.

    அதிமுக எம்.எல்.ஏ பெரியபுள்ளான் மகன் உலகாதிபதி மறைவுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    English Summary

    Ulagathipathi, the son of former Melur MLA Periyapullan alias Selvam), died in a road accident in Chennai today. The death of the MLA's son—who was pursuing his studies in Chennai—in an accident involving a collision with a JCB machine has caused shock.