திமுக மாஜி எ.வ.வேலு இன்று கைதாகிறார்? 3 நாட்கள் ஜாமீனும் கிடைக்காது.. விஜய் மிகப்பெரிய மூவ்!

  • சென்னை: திமுக மாஜி எ.வ.வேலு இன்று இரவு கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. நாளை முதல் 3 நாட்கள் கோர்ட் விடுமுறை என்பதால் அவருக்கு பெயில் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

    Advertisement

    தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போதைய புதிய அரசு (TVK) பொறுப்பேற்ற பிறகு, முந்தைய திமுக ஆட்சியின் முக்கிய புள்ளிக்கு எதிராக எடுக்கப்படும் முதல் மிக முக்கிய அதிரடி நடவடிக்கை இதுவாகும்.

    Advertisement

    வழக்குப்பதிவு செய்யப்பட்டு சோதனைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், எ.வ.வேலு இன்று எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. நாளை (வெள்ளிக்கிழமை) மொகரம் பண்டிகைக்கான அரசு விடுமுறை, அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், இன்று கைது நடவடிக்கை பாய்ந்தால் வார இறுதி நாட்கள் முடியும் வரை அவருக்கு உடனடியாக ஜாமீன் கிடைப்பதில் கடும் சிக்கல் ஏற்படும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    வழக்கும் பின்னணியும் என்ன?

    கடந்த 2022-ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிராக செயல்படும் 'அறப்போர் இயக்கம்' அமைப்பின் ஜெயராம் வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2022 மார்ச் மாதத்தில், மாநில நெடுஞ்சாலைத்துறையின் பல்வேறு பிரிவுகளில், பல கோடி ரூபாய் மதிப்பிலான சாலைப் பணிகள் எதுவும் செய்யப்படாமலேயே, குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டுச் சேர்ந்து இந்த இமாலய ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

    Advertisement

    குறிப்பாக, திருப்பூர் வட்டத்தில் சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட ₹4.19 கோடியில், எந்தப் பணியும் செய்யாமல் ₹3.23 கோடி ரூபாய் மோசடியாக வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, 2022 ஏப்ரலில் நான்கு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    நள்ளிரவில் போடப்பட்ட சாலைகள் - ஆதாரங்களை அழிக்க முயற்சியா?

    அறப்போர் இயக்கம் தனது புகாரில் மற்றுமொரு அதிர்ச்சி தகவலையும் குறிப்பிட்டிருந்தது. அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, 2022 ஏப்ரல் 8-ஆம் தேதி நள்ளிரவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட 'சங்கரானந்த் இன்ஃப்ரா' ஒப்பந்ததாரர் அவசர அவசரமாக சாலைகளை அமைத்ததாகக் கூறப்படுகிறது. அரசுப் பணத்தை கையாடல் செய்ததற்கான ஆதாரங்களை முற்றிலுமாக அழிப்பதற்காகவே காவல்துறையின் பாதுகாப்போடு இந்த நாடகம் அரங்கேறியதாக குற்றம் சாட்டப்பட்டது. கரூர், கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இதே போன்ற முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

    Advertisement

    இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 23, 2026 அன்று தமிழக அரசு இந்த வழக்கை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியதை அடுத்து, எ.வ.வேலு உட்பட 9 நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் சங்கரன் இன்ஃப்ரா நிறுவனம் மீது கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், ஏமாற்றுதல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு (FIR) செய்யப்பட்டுள்ளது.

    எ.வ.வேலு தான் நிரபராதி என்பதை நிரூபிப்பார்: மு.க.ஸ்டாலின்

    இந்த அதிரடி சோதனை மற்றும் கைது அச்சம் குறித்து திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 'X' (ட்விட்டர்) பக்கத்தில் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

    Advertisement

    "நெடுஞ்சாலைத்துறை முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். இதனை அவர் சட்டரீதியாக எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் தனது நிரபராதித்தன்மையை நிரூபிப்பார். அரசியல் பழிவாங்கும் நோக்கில் திமுக ஆட்சியின் மீது சுமத்தப்பட்ட எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டுகளும் இதுவரை நிரூபிக்கப்பட்டதாக சரித்திரமே இல்லை. ஆளுங்கட்சியின் இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சி பின்வாங்கும் இயக்கம் திமுக அல்ல. இதைவிடப் பெரிய அடக்குமுறைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். இதையும் எதிர்கொண்டு தர்மத்தின் பக்கம் நின்று வெல்வோம்" என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    அரசியல் ரீதியாக இந்த சோதனை பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இன்று மாலைக்குள் எ.வ.வேலு கைது செய்யப்படுவாரா அல்லது நீதிமன்றத்தை நாடுவாரா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் உச்சகட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Former Minister EV Velu Faces Imminent DVAC Arrest Risk Ahead of Holiday Weekend