விசிகவில் இருந்து விலகுவதாக பனையூர் பாபு அறிவிப்பு.. திருமாவளவன் குழப்பத்தில் இருப்பதாக வேதனை


  • சென்னை: விசிகவில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், தொல் திருமாவளவன் சமீபத்தில் எடுத்துவரும் நிலைப்பாடுகள் வேதனை அளிப்பதாகவும், கொள்கையில் உறுதியாக இல்லாமல் குழப்பத்தில் இருப்பதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    மக்கள் சித்தாந்தந்தகளை விட கவர்ச்சியின் பின்னால் ஈர்க்கப்படுவது ஆபத்து என அம்பேத்கர் எச்சரித்து இருக்கிறார் என்றும், குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் என்னால் பயணிக்க இயலாது என எனது மனசாட்சி உணர்த்துகிறது என கூறியுள்ளார்.

    Advertisement

    விசில் அடிப்பவர்கள் எல்லாம்..

    விசிகவில் இருந்து செய்யூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு வெளியேறி உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பனையூர் பாபு கூறியிருப்பதாவது:- "விசில் அடிப்பவர்கள் எல்லாம் திரையரங்கத்திற்குத்தான் செல்ல வேண்டும், சட்டமன்றத்திற்கு வரக் கூடாது.. அவர்கள் பெரியாரும் அம்பேத்கரும் பேசிய அரசியலையும், கொள்கைகளையும் வீழ்த்துவதற்கு வந்தவர்கள்" என்று சூளுரைத்த அவர், இன்று அவர்களுடனே கைகோர்க்கவும், இயக்கத்தின் கொள்கையை மழுங்கடிக்கவும் முற்படுவது முரண்பாட்டின் உச்சமாகும்.

    ஆட்சி அதிகாரங்கள் வரும், போகும்; அது நிலையற்றது. ஆனால், அய்யா பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் நமக்கு வகுத்துத் தந்த கொள்கைகளே என்றென்றும் வாழும் நிலையான ஆயுதங்கள். அரசியல் தளத்தில், "மக்கள் சித்தாந்தங்களை விடக் கவர்ச்சியின் பின்னால் ஈர்க்கப்படுவது ஆபத்தானது" என்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்.

    Advertisement

    இனியும் என்னால் பயணிக்க இயலாது

    ஆனால் இன்று அந்த அபாயகரமான திசையில்தான் கொண்டிருக்கிறோமோ என அஞ்சுகிறேன். பயணித்துக்கொண்ட கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல், அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் என்னால் பயணிக்க இயலாது என எனது மனசாட்சி உணர்த்துகிறது.

    எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் முழுமையாக விலகுகிறேன் என்ற எனது முடிவைக் கனத்த இதயத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

    விஜய்க்கு ஆதரவு கொடுத்த திருமாவளவன்

    நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தல் பல ட்விஸ்டுகளை கொடுத்துள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி அமைந்துள்ளது. 108 இடங்களில் விஜய்யின் தவெக வெற்றி பெற்று தற்போது திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி முழுதாக திமுகவில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி வைத்ததோடு ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்துள்ளது.

    Advertisement

    இதையடுத்து திருமாவளவனின் விசிகவும் விஜய்க்கு ஆதரவு கொடுத்ததோடு வன்னியரசு அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்தியன் முஸ்லீம் லீக் கட்சியும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து தற்போது அவர் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ ஷாஜகான் அமைச்சராக பதவியேற்றுள்ளார். விசிக திருமாவளவன் நீண்ட ஆலோசனைக்கு பிறகே விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார்.

    திருமாவளவனுக்கு அதிர்ச்சி

    இதன்பிறகு விஜய் அமைச்சர் பொறுப்பு ஏற்க வேண்டும் என விசிக தொல் திருமாவளவனிடம் விருப்பம் தெரிவித்தார். இதனால் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த திருமாவளவன் வன்னியரசு அமைச்சராக பதவியேற்பார் என அறிவித்தார். கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக விசிகவை சேர்ந்த ஒருவர் அமைச்சராக பதவியேற்று இருப்பது நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே சூழலில் இந்த முடிவு சிலருக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தான் தற்போது விசிகவில் இருந்து அதிருப்தி அடைந்த பனையூர் பாபு அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது திருமாவளவனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    English Summary

    Former MLA Panaiyur Babu has announced his exit from Thol. Thirumavalavan-led VCK, stating that the party leader’s recent actions were disappointing. He also said politics driven by charisma over ideology is dangerous, citing Ambedkar’s views.