அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

  • சென்னை: அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், முன்னாள் எம்.பி-யுமான இளவரசன் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

    Advertisement

    ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக 11 முறை தோல்வியடைந்தும் அதற்கான காரணங்கள் ஆராயப்படவில்லை என்றும், பொதுச் செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி இந்தத் தோல்விகளுக்குப் பொறுப்பேற்கவில்லை என்றும் முன்னாள் எம்.பி இளவரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

    Advertisement

    2007 ஆம் ஆண்டு முதல் 2013 வரை அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்.பியாக பொறுப்பு வகித்தவர் இளவரசன். அப்போது அதிமுக ராஜ்யசபா கொறடாவாகவும் செயல்பட்டார். 1989ல் ஆண்டிடம் சட்டசபை தொகுதியிலும், 1996ல் அரியலூர் தொகுதியிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டுள்ளார். கட்சியில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். அதிமுகவின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி.யும் கொள்கை பரப்பு துணை செயலாளருமான இளவரசன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர் தோல்விகளை அதிமுக சந்தித்து வருகிறது என்று இளவரசன் கூறியுள்ளார்.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமிக்கு இளவரசன் எழுதியுள்ள கடிதத்தில், "திருச்சி ஆ.இளவரசன் எனும் நான், 1983ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆசியால் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் விசுவாச மிக்க தொண்டனாக பணியாற்றி இருக்கிறேன். கடந்த 42 ஆண்டுகளாக எந்த சூழ்நிலையிலும் கட்சியும் மாறவில்லை, கட்சி பிளவுபட்ட போதும் அணியும் மாறவில்லை.

    ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, கழகம் தங்கள் தலைமையில் துடுப்பு இல்லாத படகைப் போல் அல்லாடுவதைக் கண்டு கண்ணீர் விடும் லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன். ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிறகு மிகுந்த நம்பிக்கையுடன் கழகத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு உங்களை தேர்ந்தெடுத்தோம். ஆனால் கழகத் தொண்டர்களின் நம்பிக்கை நிலைக்குலைந்து போகும் அளவிற்கு கழகத்தில் தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் இருந்தன.

    Advertisement

    ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அனைத்து தேர்தல்களிலும் உழைப்பிற்கும் விசுவாசத்திற்கும் இடமில்லாமல் போனது. புதியவர்களும் பணத்திற்கும் மட்டுமே பிரதான இடம் பெற்றிருந்தது. இதன் காரணமாகவே கழகம் தொடர்ந்து பதினொரு முறை தோல்விகளை சந்தித்தது. முக்கியமாகதோல்விக்கான காரணத்தையும் ஆராயவில்லை. பொதுச் செயலாளர் என்ற முறையில் தோல்விக்கு பொறுப்பேற்கவும் மறந்துவிட்டீர். மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைகளையும் புறந்தள்ளிவிட்டீர்.

    அதைவிட கொடுமை, கழகத்தின் எதிர்கட்சியான திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஆதரவோடு முதலமைச்சராகுவதற்கும் துணிந்துவிட்டீர். எனவே கழகக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், அ.தி.மு.க அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் மிகுந்த மனவேதனையோடு வெளியேறுகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Ilavarasan, the AIADMK Deputy Propaganda Secretary and a former MP, has announced his resignation from all party positions, including that of a basic member. Former MP Ilavarasan alleged that Edappadi Palaniswami, in his capacity as General Secretary, failed to take responsibility for these failures.