சென்னை: தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, ஆந்திராவிலிருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டு, மத்திய அமைச்சராக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
இந்தியாவில் ஜூன் 21 மற்றும் ஜூலை 19 ஆகிய தேதிகளில் ஆந்திரா (4), குஜராத் (4), கர்நாடகா (4) உட்பட பல்வேறு மாநிலங்களில் காலியாகும் 24 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், தமிழக அரசியலில் மிக முக்கிய திருப்பமாக, தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை ஆந்திரப் பிரதேசம் வழியாக ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி ஒப்பந்தம்: ஆந்திராவில் காலியாகும் 4 இடங்களுக்கு அங்கு ஆளும் தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது. டெல்லியின் உத்தரவு: இந்த இடங்களில் ஒரு இடத்தை பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும் என்றும், அதில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலையை நிறுத்த மேலிடம் விரும்புவதாகவும் ஆந்திர கூட்டணிக் கட்சிகளிடம் டெல்லி தலைமை திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அரசியல் முக்கியத்துவம்: தமிழகத்தில் தீவிர அரசியல் ஆற்றி வந்த அண்ணாமலையை, அண்டை மாநிலமான ஆந்திரா வழியாக நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வருவதன் மூலம், அவருக்கு மத்திய அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் அல்லது தேசிய அளவில் பெரிய அங்கீகாரம் கிடைக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்து அவருக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அப்போது அதிமுக- பாஜக இடையே கூட்டணியும் அமைந்தது. அப்போது அமித்ஷாவிடம், அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என அமித்ஷா தெரிவித்திருந்தார். இதனால் அவருக்கு என்ன பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் அவருக்கு சட்டசபை தேர்தலில் அண்ணாமலைக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து பாஜகவினர், அண்ணாமலை தனக்கு வாய்ப்பு வேண்டாம் என கூறிவிட்டதாக தெரிவித்தனர். இந்த நிலையில் அண்ணாமலை தனிக் கட்சியை தொடங்குகிறார் என்றெல்லாம் பேசப்பட்டது. மேலும் அண்ணாமலை விவசாயம் செய்ய போவதாகவும் அறிவித்திருந்தார். பால் பண்ணையை திறக்க போவதாகவும் சொல்லப்பட்டது. பாஜகவில் அண்ணாமலை தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதாக பலரும் கூறி வரும் நிலையில் அவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அமைச்சராக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.