திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்!

  • சென்னை: விசிகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார். அவருடன் 1,000-க்கும் மேற்பட்டோர் விசிக-வில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர்.

    Advertisement

    விடுதலை சிறுத்தைகள் கட்சியில், துணை பொதுச் செயலாளர், மாநில ஊடகப்பிரிவு முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் இருந்த பனையூர் பாபு, திருமாவளவனுக்கு மிகவும் நெருக்கமாக இயங்கி வந்தவர். விசிகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான வெளிச்சம் டிவி-யை நிர்வகித்து வந்தார். இந்நிலையில், தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்மையில் கட்சியில் இருந்து விலகியிருந்தார் பனையூர் பாபு.

    Advertisement

    கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல், அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் என்னால் பயணிக்க இயலாது என்று கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து செய்யூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு விலகி இருந்தார்.

    முன்னதாக விசிக தலைவர் திருமாவளவனின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தார் பனையூர் பாபு. "நேற்று வரை ஒரு நடிகரை 'ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி பெற்றெடுத்த பிள்ளை' என்று கடுமையாக விமர்சித்த திருமாவளவன், இன்று அதே பிள்ளையைத் தத்தெடுப்பது போல் நிலைப்பாடு எடுப்பது, அவர் இதுகாலம் வரை சமரசமின்றி கட்டிக்காத்த கொள்கைகளிலும், கருத்தியலிலும் தடம்மாறத் தயாராகிவிட்டார் என்பதையே அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது." என விமர்சித்திருந்தார்.

    Advertisement

    விசிகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வி.சி.க-வினருடன் இணைந்துள்ளார். அவருடன் சுமார் 1,200 பேர், விசிகவில் இருந்து விலகி திமுகவில் இன்று இணைந்துள்ளனர்.

    திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதன்மை செயலாளர் டிஆர் பாலு முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார் விசிக முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு. திமுகவில் இணைந்துள்ள பனையூர் பாபுவுக்கு மதுராந்தகம், செய்யூர் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    English Summary

    Former MLA Panaiyur Babu, who left the VCK, is joining the DMK today in the presence of DMK leader Stalin. Reports indicate that over 1,000 others are also set to leave the VCK and join the DMK along with him.