சென்னை: இன்று தொடங்கும் விடுமுறை 4 நாட்களுக்கு நீடிக்கிறது. தொடர் விடுமுறை காரணமாக சென்னையிருந்து மக்கள் சொந்த ஊர் நோக்கி படையெடுத்திருக்கின்றனர். எனவே அவர்களின் வசதிக்காக சென்னையிலிருந்து இன்று மங்களூர் மற்றும் மானாமதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வழக்கமாக தொடர் விடுமுறை வந்துவிட்டால் ரயில்களில் கூட்டம் அலை மோதும். பேருந்துகள் போதுமான அளவில் இல்லை என மக்கள் புலம்புவார்கள். எனவே இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், தற்போது சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
அதன்படி, ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று காலை 9.45 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (06035) இரவு 9.30க்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். அதேபோல மங்களூருக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரிலிருந்து இன்று இரவு 11.55 மணிக்கு சிறப்பு விரைவு ரயில் (06036) புறப்படுகிறது. இது நாளை இரவு 7.45 மணிக்கு மங்களூர் சென்ட்ரல் சென்றடையும். பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, சரனூர், கோழிக்கோடு, வடகரை, தலைச்சேரி, கன்னூர், பொய்யானூர், கங்கங்காடு, கசார்கோடு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சென்னை எழும்பூரிலிருந்து இன்று இரவு 11.35 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில், நாளை மதியம் 11 மணிக்கு மானாமதுரையை சென்றடையும். நாளை மானாமதுரையிலிருந்து காலை 10.45க்கு புறப்படும் மெமு ரயில் மற்றும் அக்.20ம் தேதி புறப்படும் முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில்கள் ஏறத்தாழ 13 மணி நேர பயணத்திற்கு பிறகு சென்னை எழும்பூர் வந்து சேரும். மானாமதுரைக்கு இயக்கப்படும் மெமு ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, திருப்புவனம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இது தவிர, இன்று இரவு 7 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் பண்ருட்டி, சீர்காழி, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மானாமதுரைக்கு சிறப்பு ரயில்கள்
மங்களூருக்கு சிறப்பு ரயில்கள்
13 மணி நேர பயணம்
திருச்சிக்கும் சிறப்பு ரயில்