சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப்பொறுப்பேற்று 4 மாதங்கள் நிறைவடைந்திருக்கிறது. இருப்பினும் இந்த காலத்தில்.. RTI அரசாணை தொடர்பான உத்தரவு தொடங்கி பல உத்தரவை வாபஸ் பெற்று, இந்த அரசு யு-டர்ன் அடித்திருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
இந்த விவகாரம் ஜோதிடர் நியமனத்திலிருந்து தொடங்குகிறது. அதாவது விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் அவரது ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு அதிகாரப்பூர்வ அரசுப் பதவி வழங்கப்பட்டது.
இவருக்கு முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு பணி அதிகாரி பணி நியமனம் வழங்கப்பட்டது. இந்த நியமனம் எதிர்க்கட்சிகளிடையே மட்டுமல்லாது, கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களிடையேயும் எதிர்ப்பை உருவாக்கியது. இதையடுத்து இந்த உத்தரவு வெளியான ஒரே நாளில், உத்தரவை அரசு திரும்ப பெற்றது. பின்னர் கொஞ்ச நாட்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. ஆனால், ஸ்மூத்தா போனால்தான் இந்த அதிகாரிகளுக்கு பிடிக்காதே! எனவே மற்றொரு உத்தரவை பிறப்பித்தனர். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் எத்தனை இடதுசாரிகள் இருக்கின்றனர்? என்று கணக்கெடுப்பு நடத்த வட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார். தவெக ஆட்சி அதிகாரத்திற்கு வரவும், விஜய் முதலமைச்சராகவும் ஆதரவு கொடுத்தது இடதுசாரிகள். இப்படி இருக்கையில், இடதுசாரிகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்த உத்தரவு போடப்பட்டது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கம்யூனிஸ்ட் கட்சியினர் கொந்தளித்து தவெக அரசுக்கு எதிராக காட்டமாக அறிக்கை விட்டனர். நாங்கள் வேணுமா? குஜிலியம்பாறை வட்டாட்சியர் போன்ற அதிகாரிகள் வேண்டுமா? என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள் என விஜய்க்கு நேரடியாக வார்னிங் கொடுத்தனர். இதையடுத்து இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டு.. வட்டாட்சியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். சரி இத்துடன் சலசலப்பு நின்றதா? என்று கேட்டால் இல்லை! இந்த பணியிட மாற்ற உத்தரவு வந்த அடுத்த ஒரிரு நாட்களில் மீண்டும் இடதுசாரிகளை குறிவைத்து மற்றொரு உத்தரவு வந்தது. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் நடந்தும் போராட்டங்களை தடுக்கவும், அந்த போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதை தடுக்கவும் வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. இதென்ன வேலியில் போன ஓணானை பிடித்து வேட்டியில் விட்ட கதையாக மாறவிட்டதே என்று.. கம்யூனிஸ்ட்கள் உச்சக்கட்ட கோபத்திற்கே சென்றுவிட்டனர். அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வழக்கம் போல.. இந்த உத்தரவும் வாபஸ் பெறப்பட்டது. இதன் பின்னர் தூய்மை பணியாளர்கள் குறித்து விடுக்கப்பட்ட அறிக்கையும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை கோரும் டெண்டர் வெளியாகியிருந்தது. இதற்கு கூட்டணி கட்சிகளே கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. அதன் பின்னர் மேல்மா சிப்காட் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அரசாணை வெளியாகியிருந்தது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா கிராமத்தில் சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால்தான் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டமே ரத்து செய்யப்பட்டிருந்தது. அப்படியெனில் திருவண்ணாமலையில் மட்டும் விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்களா? என்று மக்கள் கொந்தளித்தனர். இதையடுத்து இந்த திட்டமும் வாபஸ் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து சொத்துவரி உயர்வு, காலை உணவு விரிவாக்கத்திற்கான அடிப்படை வசதிகளை ஆசிரியர்கள் சொந்த நிதியில் மேற்கொள்ள வேண்டும்.. இப்படியாக கடைசியில் வெளியான சட்டம் ஒழுங்கு தகவல்களுக்கு RTIன் கீழ் விலக்கு குறித்து வெளியான அரசாணை வரை கடும் எதிர்ப்பால் அப்படியே திரும்பப்பெறப்பட்டிருக்கிறது. இதுபோக முதல்வரின் தனிச் செயலர்கள் நியமன அரசாணை, சென்னை விமான நிலையம் தொடர்பாக பிரதமருக்கு முதலவர் அனுப்பியதாக சொல்லப்படும் கடிதம், கனிமவள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு அனுப்பிய கடிதம் உள்ளிட்டவை இன்னும் வெளியே வராமல் இருக்கின்றன. அதேபோல புதிய தலைமை செயலகம் தொடர்பான உத்தரவு வாபஸ் பெறப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இப்படியாக 4 மாதத்தில் பல உத்தரவு வாபஸ் பெறப்பட்டிருக்கின்றன. மக்களின் மனநிலையை அறியாமல், அதிகாரிகள் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிப்பதால்தான் இதுபோன்று வாபஸ் பெற வேண்டி இருக்கிறது. எனவே மக்களின் நலனை அறிந்து உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.ஆஸ்தான ஜோதிடருக்கு அமோகமான பதவி
கூட்டணிக்கே ஆப்பு
மாணவர்களுக்கு எதிரான உத்தரவு
தூய்மை பணியாளர்களுக்கு எதிரான உத்தரவு
சிப்காட் நிலம்
வாபஸ் பெற காத்திருக்கும் உத்தரவுகள்