சென்னை: சென்னையில் புதிய தலைமைச்செயலகம் அமைப்பதற்கு பட்டினப்பாக்கம், கிண்டி, நந்தம்பாக்கம், கோயம்பேடு ஆகிய 4 இடங்கள் பரிசீலனையில் உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய தலைமைச் செயலகத்துக்கான இடத்தை தேர்வு செய்வதில் நிலத்தின் அளவு மட்டும் முக்கியம் இல்லை. போக்குவரத்து வசதி, பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் அரசு யோசித்து வருகிறது. அப்படி பார்த்தால், பட்டினம்பாக்கம் அல்லது கிண்டியில் அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய், விதி எண் 110ன் கீழ் தலைமை செயலகம் குறித்து அறிவிப்பு வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், "புனித ஜார்ஜ் கோட்டையானது கிழக்கிந்திய கம்பெனியால் 1640-ம் ஆண்டு சென்னையில் வணிக செயல்பாட்டு மையத்திற்காக வாங்கப்பட்ட நிலத்தில், 1644-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 1652-ம் ஆண்டில் பிரசிடென்சி நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகாரப்பூர்வ தலைமையிடமாகத் திகழ்ந்தது.
சுதந்திரத்திற்குப் பிறகு இது, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சுமார் 400 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசின் நிர்வாக மையமாகவும், மாநிலத்தின் ஆட்சிப் பாரம்பரியத்தின் அடையாளமாகவும் விளங்கி வருகிறது. 107 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இவ்வளாகத்தில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தலைமைச் செயலகத்தின் பயன்பாட்டிற்காக 4 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே உள்ளது. மீதமுள்ள நிலப்பரப்பு இந்திய பாதுகாப்புத் துறை மற்றும் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. எனவே இவ்வளாகத்தை விரிவுபடுத்தவோ, மேம்படுத்தவோ முடியவில்லை. தற்போது தலைமைச் செயலகம் 2 கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. தலைமைச் செயலகப் பிரதான கட்டிடமாக அறியப்படும் புனித ஜார்ஜ் கோட்டை, தற்போது சட்டமன்றம், முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் அறைகள், நிதித்துறை மற்றும் பிற முக்கியத் துறைகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வளாகம் 2 லட்சத்து 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. மாநில அரசின் விரிவடைந்து வரும் நிர்வாகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், நாமக்கல் கவிஞர் மாளிகை 1978-ம் ஆண்டு 3 லட்சத்து 75 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 10 தளங்களுடன் கட்டப்பட்டது. இக்கட்டிடங்களில் 30-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் அரசு செயலாளர்கள், அலுவலர்கள் மற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இடப்பற்றாக்குறையின் காரணமாக நிர்வாக நலனைக் கருதி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. பின்னர், அக்கட்டிடமானது பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டதால் தலைமைச் செயலகம் தொடர்ந்து கோட்டை வளாகத்திலேயே செயல்பட்டு வருகிறது. கடந்த 40 ஆண்டு காலங்களில் தலைமைச் செயலகத்தின் அனைத்து அரசுத் துறைகளின் பணியாளர்களின் எண்ணிக்கையும், நிர்வாகப் பொறுப்புகளும் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளன. இருப்பினும், தற்போதைய கட்டமைப்புகள் பெரும்பாலும் மாற்றப்படாமல் இருப்பதால் தேக்க நிலையை தமிழ்நாட்டின் எதிர்கால நிர்வாக வளர்ச்சிக்கும், திறன்மிக்க நிர்வாகத்திற்கும், உலகத்தரத்திலான பொது நிர்வாக உள்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கிலும் ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பது இன்றியமையாதது. புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில், அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டு வந்து ஒருங்கிணைக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பில் உருவாக்கப்படும்" இவ்வாறு முதல்வர் விஜய் கூறியிருந்தார். இந்த சூழலில் புதிய தலைமைச்செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கப்படும் இடத்தை தேர்வு செய்யும் பணியில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். புதிய கட்டிடத்துக்கு போதுமான இடம் இருக்கிறதா, போக்கு வரத்து வசதி எப்படி உள்ளது, எதிர்காலத்தில் மேலும் கட்டிடங்களை அமைக்க இடம் கிடைக்குமா, சுற்றுச்சூழல் மற்றும் சட்டப்பிரச்சினைகள் உள்ளனவா என்பன குறித்து ஆய்வு நடந்து வருகிறது. பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் 25 ஏக்கர் நிலம் உள்ளது. நகரின் முக்கிய பகுதிகளுக்கு அருகில் இருப்பது இந்த இடத்தின் சாதகமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இது கடலோரப் பகுதி என்பதால், கட்டிடங்கள் அமைப்பது தொடர்பான விதிமுறைகளை பின்பற்ற சிக்கல்கள் வரலாம். அதேபோல் கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சுமார் 35 ஏக்கர் நிலம் உள்ளது. இதுதவிர, கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியிலும் பெரிய அளவில் நிலம் இருப்பதால், இந்த பகுதியும் முக்கியமாக பரிசீலிக்கப்படுகிறது. அதேபோல் நந்தம்பாக்கத்தில் 20 ஏக்கருக்கும் அதிகமான நிலம் இருக்கிறது. விமான நிலையம் அருகில் இருப்பதும், தெற்கு மற்றும் மேற்கு சென்னையில் இருந்து எளிதாக வந்து செல்ல முடிவதுமாக இருப்பது சாதகமாக பார்க்கப்படுகிறது. நந்தம்பாக்கம் பகுதியில் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இதேபோல் கோயம்பேட்டில் உள்ள பழைய பேருந்துநிலையப்பகுதி சுமார் 36 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பெரிய நிலப்பரப்பு, மெட்ரோ ரெயில் வசதி மற்றும் சென்னையின் பல பகுதிகளுடன் உள்ள சாலை இணைப்பு ஆகியவை உள்ளன. கோயம்பேடு தற்போது சென்னையின் முக்கியமான போக்குவரத்து மையங்களில் ஒன்றாக இருப்பதால் அங்கு அமைக்கலாமா என்ற யோசனை அரசுக்கு உள்ளது.. புதிய தலைமைச் செயலகத்துக்கான இடத்தை தேர்வு செய்வதில் நிலத்தின் அளவு மட்டும் முக்கியம் இல்லை. போக்குவரத்து வசதி, பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் அரசு யோசித்து வருகிறது. இந்த நான்கு இடங்களில் கிண்டி, பட்டினம்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைய அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. எனினும் அரசு இறுதி முடிவினை அறிவித்தால் தான் தெரியவரும்.ரூ.1,200 கோடியில் புதிய சட்டசபை