இலவச பஸ் பயணத்தால் ஆட்டோவுக்கு சவாரி இல்லை.. கை காசு போகுது.. ரூ.3000 உதவித்தொகை கேட்கும் டிரைவர்கள்

  • சென்னை: பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்.. தமிழக அரசின் வெற்றிப் பயணத் திட்டத்தால் மகளிர் மகிழ்ச்சியாக பயணம் செய்கிறார்கள்.. ஆனால், இதே திட்டம் ஆட்டோ டிரைவர்களுக்கான வருமான பாதிப்பை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. தினமும் ரூ.100, ரூ.200 கூட சம்பாதிக்க முடியாமல் தவிப்பதாக புலம்பும் டிரைவர்கள், இப்போது தமிழக அரசிடம் ஒரு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளனர். அதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்..!!

    Advertisement

    தமிழகத்தில் மகளிர் இலவசமாக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் வகையில் வெற்றிப் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மாநகர, நகர்ப்புற சாதாரண மற்றும் விரைவு பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம். இந்த திட்டம் பெண்களின் பயண செலவை குறைக்க உதவுகிறது.

    Advertisement

    கடந்த அக்டோபர் 2-ம் தேதி இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் கீழ் பெண்கள் மட்டுமல்லாமல், சிறுமியர் மற்றும் திருநர்களும் குறிப்பிட்ட அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம்.

    சிக்கலில் ஆட்டோ டிரைவர்கள்

    பெண்களுக்கு இந்த இலவச பயணம் மகிழ்ச்சியை தந்தாலும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அது வருமான பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. முன்பெல்லாம் ஆட்டோக்களில் பயணம் செய்த பெண்களில் பலர், இப்போது இலவச பஸ் பயணத்தை தேர்வு செய்து விடுவதால், தங்களுக்கு கஸ்டமர்கள் கிடைப்பதில்லை என்பதே ஆட்டோ டிரைவர்களின் வேதனையாக உள்ளது.

    இதனால் தினமும் கிடைக்கும் வருமானம் குறைந்துவிட்டதாகவும், சில நாட்களில் ரூ.100, ரூ.200 கூட சம்பாதிக்க முடியாமல் தவிப்பதாகவும் அவர்கள் வருத்தப்படுகிறார்கள்.. ஏற்கனவே குடும்ப செலவுகள், குழந்தைகளின் படிப்பு செலவு உள்ளிட்டவற்றை சமாளிக்க வேண்டிய நிலையில், வருமானம் குறைந்திருப்பது தங்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் சொல்கிறார்கள்.

    Advertisement

    மாதம் ரூ.3,000 உதவித்தொகை

    இந்நிலையில்தான் திண்டுக்கல் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வெற்றிப் பயணத் திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக வேதனை தெரிவித்த அவர்கள், தமிழக அரசு தங்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

    "தமிழக அரசுக்கு தான் வெற்றிப் பயணம்.. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எல்லாம் தோல்விப் பயணம்" என்று அவர்கள் வேதனையுடன் சொல்கிறார்கள்.. இந்த திட்டத்தால் ஏற்படும் வருமான இழப்பை அரசு கருத்தில் கொண்டு, தங்களது குடும்பங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

    Advertisement

    அமைச்சர் தந்த பிராமிஸ்

    இதனிடையே, வெற்றிப் பயணத் திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி தேனி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் 20-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். டிரைவர்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதையடுத்து சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    எனினும், ஆட்டோ ஓட்டுநர்கள் கேட்கும் மாதம் ரூ.3,000 உதவித்தொகை கிடைக்குமா? அவர்களின் வருமான பாதிப்புக்கு அரசு என்ன தீர்வு காணப்போகிறது? என்பதுதான் இப்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது..!!!

    English Summary

    Free Bus Vetri Payanam Scheme: Auto Drivers Demand Rs 3,000 Aid as Rides Dry Up