பட்டா இல்லாவிட்டாலும் கரண்ட்! 200 யூனிட் இலவச மின்சாரம்.. புறம்போக்கு வீடுகளுக்கு முக்கிய கண்டிஷன்

  • சென்னை: புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசிப்பவர்களுக்கு மின் இணைப்பு கிடைக்குமா? 200 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்குமா? என்ற கேள்விகளுக்கு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார். 250 சதுர அடிக்குள் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.. இந்நிலையில், மழையால் மின் தேவை குறைந்துள்ளதால் மின்சாரக் கொள்முதலிலும் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில், பட்டா இல்லாததால் புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வசிப்பவர்களுக்கு மின் இணைப்பு பெறுவதில் நீண்டகாலமாகச் சிக்கல் இருந்து வந்தது.

    Advertisement

    இதற்குத் தீர்வு காணும் வகையில், 250 சதுர அடிக்குள் உள்ள வீடுகளுக்கு சில நிபந்தனைகளுடன் மின் இணைப்பு வழங்க தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. இந்த சலுகையின் கீழ் தகுதியான வீடுகளுக்கு ஒற்றை முனை மின் இணைப்பு வழங்கப்படும். மேலும், 200 யூனிட் இலவச மின்சாரமும் கிடைக்கும்.

    புறம்போக்கு நிலங்களுக்கு மின் இணைப்பு

    ஆனால், எல்லா புறம்போக்கு நிலங்களுக்கும் இந்த சலுகை கிடையாது. நீர்நிலைகள், மேய்ச்சல் நிலங்கள், வனப்பகுதிகள், ரயில்வே மற்றும் ராணுவ நிலங்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட நிலங்களில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க முடியாது. கோவில் நிலங்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தாது.

    Advertisement

    மற்ற தகுதியான நிலங்களில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். நிலத்தின் வகையை அதிகாரிகள் சரிபார்த்த பிறகே மின் இணைப்பு வழங்கப்படும்...

    மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார்

    இந்நிலையில், இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, "புறம்போக்கு நிலங்களில் இருப்பவர்களுக்கு பட்டா இல்லை என்றால் மின்சாரம் வழங்க முடியாத நிலை இருந்தது. முதல்வர் இதனைக் கவனித்து தீர்வு காண அறிவுறுத்தினார். இந்த விவகாரம் குறித்து ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த தீர்ப்பு ஆய்வு செய்யப்பட்டது.

    புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு நிபந்தனை அடிப்படையில் மின் இணைப்பு கொடுக்க விண்ணப்பம் வாங்க உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. நிறைய ஊர்களில் புறம்போக்கு நிலங்களில் வசிக்கிறார்கள்.. மேய்க்கால் புறம்போக்கு, நீர்நிலைகள், ரயில்வே நிலங்கள், ராணுவ நிலங்களில் மின் இணைப்பு வழங்க முடியாது... இதற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு உள்ளது.

    Advertisement

    குறைந்தது மின்தேவை

    மற்ற இடங்களில் வசிப்பவர்கள் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம். சிங்கிள் ஃபேஸ் தான் தரப்படும்.. 200 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும். வீடு 250 சதுர அடிக்குள் இருக்க வேண்டும். அதற்கு மேலுள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைக்காது. ஏழை, எளிய மக்களுக்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்படுகிறது.

    மழை காரணமாக மாலை நேரத்தில் மின் தேவை 1,000 மெகாவாட் குறைந்துள்ளது.. இதனால் வெளியில் இருந்து வாங்கும் மின்சாரத்தின் அளவை குறைக்கவும் திட்டமிட்டு வருகிறோம்.. மின் தேவை குறைந்ததால் 300 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.. ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு வாங்கப்பட உள்ளது..

    Advertisement

    மின்சார உற்பத்தி செலவு

    ஈரான் மீதான தாக்குதல் காரணமாக எரிவாயு விலை அதிகரித்துள்ளதால் மின்சார உற்பத்தி செலவு அதிகமாக உள்ளது.. 15 நாட்களுக்கு மட்டும் தான் மின்சாரம் வாங்க முடிவு செய்யப்பட்டது. எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பெரும்பாலான மாநிலங்கள் யூனிட் ரூ.35 என்ற விலையில் வாங்குகின்றன. இந்த வகை மின்சாரம்தான் கிடைக்கிறது. மத்திய அரசு வாயிலாக வாங்குகிறோம்.

    தமிழக அரசு மட்டும் தான் டெண்டர் விட்டது. மற்ற மாநிலங்கள் டெண்டர் விடவில்லை. இதைவிட குறைவான விலையில் மின்சாரம் கிடைக்குமா என்பதை அறிய டெண்டர் விட்டோம். மத்திய அரசு வாயிலாகத்தான் வாங்க உள்ளோம். இதனால் ஒரு நாளைக்கு ரூ.5 முதல் ரூ.7 கோடி வரை கூடுதலாக செலவாகும். மத்திய அரசின் என்விஎன், பவர் கிரிட் நிறுவனம் வாயிலாக மின்சாரம் வாங்க உள்ளோம்" என்று நிர்மல் குமார் தெரிவித்தார்.

    English Summary

    Free Electricity Without Patta? Tamil Nadu Government’s New Rule for Poramboke Houses