மூக்கில் ஆபரேஷன் செய்ய போய் உயிரிழந்த சீதாலட்சுமி! அரசு தந்த இலவச வீட்டு மனை பட்டா! நெகிழ்ந்த சகோதரி

  • சென்னை: மூக்கில் சதை வளர்ந்ததால், சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நர்சிங் மாணவி, எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.. மூக்கிற்கான அறுவை சிகிச்சையின் போது செலுத்தப்பட்ட மயக்க மருந்தால் நிகழ்ந்த இந்த மரணம், பெரும் போராட்டங்களுக்கு வித்திட்டுள்ளது.. மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய உயர்மட்ட குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், இப்போது மாணவி குடும்பத்துக்கு தமிழக அரசு வீட்டு மனை பட்டா உள்ளிட்ட நிவாரணம் வழங்கி உள்ளது.

    Advertisement

    புதுக்கோட்டை மாவட்டம் மணக்குடிபட்டியைச் சேர்ந்த 21 வயது நர்சிங் மாணவி சீதாலட்சுமி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூக்கில் சதை வளர்ச்சி தொடர்பான அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்,

    Advertisement

    மயக்க மருந்து செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூக்கில் இருந்த சிறிய பாதிப்பிற்காக சிகிச்சை பெறச் சென்ற மாணவி, உயிரிழந்து மீண்டது சக மாணவிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.

    புதுக்கோட்டை நர்சிங் மாணவி

    தவறான சிகிச்சையே உயிரிழப்பிற்கு காரணம் என குற்றம் சாட்டிய சக நர்சிங் மாணவிகள் மற்றும் உறவினர்கள், திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்திலும், கலெக்டர் ஆபீஸ் அலுவலகத்திலும் சாலை மறியலில் ஈடுபட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே இளம் உயிரைப் பறித்துவிட்டதாகக் கொந்தளித்த அவர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    Advertisement

    இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, துணை சபாநாயகர் ரவிசங்கர், அமைச்சர் ரமேஷ், ஆட்சியர் சரவணன் மற்றும் உயர் காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

    மாணவி மூக்கில் சதை

    இறுதியில், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய அரசு நிவாரணத் தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்ததன் பேரில், நள்ளிரவு 11 மணி வரை நீடித்த போராட்டமானது தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

    இதற்கு பிறகுதான் போஸ்ட் மார்ட்டம் நடத்தப்பட்டது.. பிறகு மாணவியின் உடல் அவரது சொந்த ஊரான மணக்குடிபட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று காலை கண்ணீர் மல்க இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இந்த இறுதிச்சடங்கில் 273 நர்சிங் மாணவிகள் அரசு பேருந்துகள் மூலம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.. தோழியை கண்டு சக மாணவிகள் கண்ணீர் விட்டு கதறிய காண்போரை உலுக்கி எடுத்தது,

    Advertisement

    தமிழக அரசு நிவாரணம்

    திருச்சி மாநகர காவல்துறையினர் இந்த மரணம் தொடர்பாக 'சந்தேக மரணம்' என வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்... இந்நிலையில், உறவினர்கள் நடத்திய போராட்டத்தில் மாவட்ட கலெக்டர் உறுதியளித்தபடி, மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

    மாணவியின் உயிரிழப்பால் தவித்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் வகையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் நேற்று நேரில் சென்று சந்தித்தனர்.. இந்த துயரமான சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் துணையாக நிற்கும் வகையில் அரசு சார்பில் பல்வேறு உதவிகள் உடனே வழங்கப்பட்டன.

    Advertisement

    இலவச வீட்டு மனை பட்டா

    குறிப்பாக, சீதாலட்சுமியின் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதுடன், அவரின் சகோதரி புவனேஸ்வரிக்கு தற்காலிகப் பணிக்கான பணி நியமன ஆணையையும் அமைச்சர் மற்றும் ஆட்சியர் நேரில் வழங்கினர்.. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் இந்த அரசின் விரைவான நடவடிக்கை, அந்த பகுதியில் ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

    இருந்தாலும் மருத்துவத் துறையின் அலட்சியத்தால் ஒரு இளம் உயிரைப் பறிகொடுத்த சோகம் அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு இன்னும் நீங்கவில்லை.. முறையான விசாரணை நடத்தி, உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது..!!

    English Summary

    Seethalakshmi died after going Nose Surgery! Sister Turns Emotional as Tamil Nadu Government Grants Free House Site Patta