சென்னை: தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ், தட்கல் முறையில் பதிவு செய்தவர்களிடம் வசூலிக்கப்பட்ட 2400 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை குறித்த விவகாரம் மிகப்பெரிய அதிர்லையை உண்டுபண்ணிவிட்டது.. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மின்வாரிய தலைவர் உடனடியாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.. வழக்கின் விவரத்தை பார்ப்போம்..!!
மதுரையை சேர்ந்த மனகிரி செல்வகுமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை சமீபத்தில் தாக்கல் செய்தார். அதில், "தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தட்கல் முறையின்கீழ், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தும் விண்ணப்பதாரர்கள், இலவச விவசாய மின் இணைப்பிற்காக காத்திருக்கும் பிற விண்ணப்பதாரர்களை விட முன்னுரிமை பெற முடிகிறது.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில், தட்கல் திட்டத்தின் கீழ் 89,289 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் ₹2,431.51 கோடி வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 44,993 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன; நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்திய போதிலும், 44,296 விண்ணப்பதாரர்கள் நிலுவையில் உள்ளனர். மேற்கண்ட புள்ளிவிவரங்களின் படி வசூலிக்கப்பட்ட ₹2,431 கோடி நிதி, அதன் கணக்கு மற்றும் பயன்பாடு, வழங்கப்பட்ட இணைப்புகளுக்காக செய்யப்பட்ட செலவு மற்றும் எஞ்சிய தொகை எவ்வாறு கணக்கில் காட்டப்பட்டுள்ளது என்ற தகவல் இல்லை. இவ்வளவு பெரிய தொகை வசூலிக்கப்பட்டுள்ளது அது எந்த கணக்கில் உள்ளது என விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏனென்றால் இத்திட்டம், அரசாணை படி செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை தீர்மானிக்க தணிக்கை விசாரணை செய்ய வேண்டும். மேலும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 44,993 இணைப்புகளின் பயனாளிகள் பற்றிய விவரங்கள் வழங்கப்படவில்லை. இதனால் தகுதியற்ற ஒரே நபர் பல இணைப்புகளை பெற்றுள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது. இதை பொதுமக்கள் சரிபார்ப்பது தடையாகியுள்ளது. எனவே, வெளிப்படைத்தன்மையாக இதன் பயனாளிகளை சரிபார்த்தல் வேண்டும். மாவட்ட வாரியான தரவுகளை வெளியிடுதல் மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தகுதியுள்ள விவசாயிகள், குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் பாரபட்சமற்ற முன்னுரிமை முறையை உருவாக்குதல் உத்தரவிட வேண்டும். தலைமை கணக்குக் கட்டுப்பாட்டாளர் (PAG) மூலம் சிறப்புத் தணிக்கை, குழு வசூலிக்கப்பட்ட தொகை குறித்து தணிக்கை செய்ய வேண்டும். இதில் ஊழல் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) மூலம் விசாரணை வேண்டும். மேலும் ஏழை எளிய விவசாயிகளை பாதிக்கும் தற்போதைய தட்கல் முறையை, ரத்து செய்ய வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவானது நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தத்கல் திட்டத்தில் வசூலிக்கப்பட்ட பணம் என்ன ஆனது என்ற விவரம் இல்லை, இதனால் சிறு மற்றும் குறு விவசாயிகள் பாதிக்கப்பட்டு பெரும் பணக்காரர்கள் மட்டுமே பயன்பெறுகின்றனர் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது... ஊடனே இந்த வாதத்திற்கு பதிலளித்த மின்வாரியத் துறை வழக்கறிஞர், இது குறித்து அரசுத் தரப்பிடம் உரிய தகவல் பெற்று தெரிவிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். உடனே நீதிபதிகள், ரூ.2400 கோடி வசூல் செய்து என்ன செய்தீர்கள்? இவ்வளவு பெரிய தொகை எப்படி எந்த அரசாணை அடிப்படையில் வசூலிக்கப்பட்டது? அரசு தணிக்கை கணக்கில் இந்த பணத்தை எப்படி வரவு வைத்துள்ளது? ரூ.2400 கோடி பணத்தை என்ன செய்ய போகிறீர்கள்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்கள். மேலும், தட்கல் முறையில் பெரிய விவசாயிகளுக்கு இணைப்பு வழங்கினால், ஏழை, எளிய விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்களா? என நறுக்கென கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த திட்டத்தின் கீழ் எத்தனை பயனாளிகள் பயனடைந்தனர்? காத்திருப்போர் பட்டியல் சீனியாரிட்டி முறைப்படி வைத்து உள்ளீர்களா? என சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதுமட்டுமல்லாமல், இதுகுறித்து மின்சார துறை செயலர், நிதித்துறை செயலர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை ஒத்திவைத்துள்ளனர்..!!விவசாயிகளுக்கான இலவச மின்சாரம்
தட்கல் திட்டம் விண்ணப்பங்கள்
மதுரை ஹைகோர்ட் நறுக்
தமிழக மின்சார துறை