கடலில் மிதக்கும் நகரம்.. 80,000 பேருடன் உலகை சுற்ற போகும் மெகா கப்பல்.. நினைச்சாலே தலைசுத்துதே!

  • சென்னை: ஒரே இடத்தில் இல்லாமல், அவ்வப்போது நாம் வசிக்கும் ஊர் நகர்ந்து கொண்டே சென்றால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்த்து இருக்கிறீர்களா? கற்பனையில் மட்டுமே நடக்கும் இதெல்லாம். நிஜத்தில் நடக்காது என நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால், இதை உண்மையிலேயே சாத்தியமாக்கும் முயற்சி ஒன்று நடைபெற்று கொண்டிருக்கிறது.

    Advertisement

    பல ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு திட்டம் யோசிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் நகரும் கிராமம் என்று சொல்லக்கூடிய பிரம்மாண்ட கப்பலை உருவாக்கும் திட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

    Advertisement

    Photo Credit:

    80 ஆயிரம் பேர் வசிக்க முடியுமாம்

    சுமார் ஒரு மைல் நீளம் கொண்ட ஃப்ரீடம் ஷிப் என்ற பிரம்மாண்ட கப்பலை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மிதக்கும் நகரம் என்று அழைக்கப்படக்கூடிய இந்த கப்பலில் 80 ஆயிரம் பேர் வரை வசிக்க முடியும் என திட்டமிடப்பட்டுள்ளது. அறிவியல் புனைகதை திரைப்படங்களில் இடம்பெறும் கற்பனையைப் போன்ற இந்த திட்டம், சமூக வலைதளங்களில் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.

    கடலில் தன்னிறைவு கொண்ட நகரமாக உருவாக்கப்படவுள்ள இந்த மாபெரும் கப்பல், வெறும் பயணக் கப்பலாக அல்லாமல் மக்கள் நிரந்தரமாக வசிக்கக்கூடிய நகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இடம்பெறும். மக்கள் இதில் வசித்து, வேலை செய்து, அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

    Advertisement

    பள்ளிகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள்

    இந்த திட்டம் நனவானால், உலகின் மிகப்பெரிய கடல்சார் கட்டமைப்புகளில் ஒன்றாக இது திகழும் என்று நம்பப்படுகிறது. இந்த கப்பல், பெரும்பாலும் சர்வதேச கடல் எல்லைகளிலேயே இயங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஃப்ரீடம் க்ரூஸ் லைன் இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள திட்ட விவரங்களின்படி, இந்த மாபெரும் மிதக்கும் நகரத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் நிரந்தரமாகவும், 10 ஆயிரம் பார்வையாளர்கள் மற்றும் 20 ஆயிரம் பணியாளர்கள் தங்க முடியும்.

    இந்த கப்பலில், வீடுகள், பள்ளிகள், மருத்துவ வசதிகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், அருங்காட்சியகங்கள், ஓட்டல்கள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளும் இடம்பெறும். 15 ஆயிரம் பேர் அமரக்கூடிய விளையாட்டு அரங்கம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நீர்விளையாட்டு பூங்கா, மாநாட்டு மையம், இசை அரங்கம், பூங்காக்கள், ஆராய்ச்சி மருத்துவமனை மற்றும் கப்பலின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் எளிதில் செல்ல உள்புற டிராம் போக்குவரத்து வசதியும் அமைக்கப்பட உள்ளது.

    Advertisement

    உலகை முழுமையாக ஒரு முறை சுற்றி வர

    "ஃப்ரீடம் ஷிப் என்பது கடலில் நிரந்தரமாக இயங்கும் நகரமாக கற்பனை செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சுற்றுலா கப்பல் அல்ல. மாறாக, நிலையான நகர்ப்புற சூழலாக இருந்து, உலகை தொடர்ந்து சுற்றிவரும் நிலையில் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் வழங்கும்," என்று இந்த திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனம் கூறுகிறது.

    இந்த கப்பல் மணிக்கு சுமார் 7 நாட்ஸ் (கடல் மைல் வேகம்) வேகத்தில் பயணித்து, உலகை ஒரு முறை முழுமையாகச் சுற்றி வர 2 முதல் 3 ஆண்டுகள் வரை எடுக்கும் என கூறப்படுகிறது. இந்த கப்பல் மிகவும் பிரம்மாண்டமானது என்பதால், உலகின் பெரும்பாலான துறைமுகங்களில் இந்த கப்பலை நேரடியாக நிறுத்த முடியாது. எனவே அதில் தங்கியிருப்பவர்கள், பார்வையாளர்கள் சிறிய படகு சேவைகள் மற்றும் விமானங்கள் மூலம் கப்பலுக்கு அழைத்து வரப்படுவார்கள். சரக்குகளும் இதே வழியில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

    Advertisement

    மக்களிடம் ஆர்வம்

    இந்த கப்பலுக்கு எரிபொருளாக அணுசக்தியை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதிக்கப்படுகிறது. எனினும், இது உறுதி செய்யப்படவில்லை. பல ஆண்டுகளாகவே இந்த கப்பல் பற்றிய விவாதம் எழுந்து பலருக்கும் ஆர்வத்தை தூண்டினாலும், கட்டுமானச் செலவு, சுற்றுச்சூழல் பாதிப்புகள், பாதுகாப்பு அம்சங்கள், பராமரிப்பு செலவுகள் மற்றும் தொழில்நுட்ப சவால்கள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்விகள் எழுகின்றன.

    20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டாலும், ஃப்ரீடம் ஷிப் திட்டம் இன்னும் செயல்படவில்லை. திட்டத்தை உயிர்ப்பிக்கும் முயற்சிகள் பலமுறை மேற்கொள்ளப்பட்டாலும், இதுவரை அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. எனினும், வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு மையங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்ட மிதக்கும் நகரம் என்ற இந்த கற்பனைத் திட்டம் உலகம் முழுவதும் மக்களிடம் மீண்டும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

    English Summary

    Freedom Ship, a proposed floating city designed to house 80,000 people, has regained attention online. Envisioned as a self-sustaining community with homes, schools and hospitals, the ambitious project has remained unbuilt despite being discussed for over two decades.