சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி ஜல்லி கற்கள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், தாம்பரம் அருகே தடம்புரண்டது. இதையடுத்து தண்டவாளத்தில் இருந்து விலகிய ரயில் பெட்டிகளை மீண்டும் நிலைநிறுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சரக்கு ரயில் ஒன்று இன்று காலை புறப்பட்டு சென்றது. 16 பெட்டிகளுடன் புறப்பட்ட இந்த ரயில் தாம்பரம் அருகே சென்ற போது திடீரென சரக்கு ரயிலின் என்ஜின் பெட்டியின் சக்கரங்கள் தடம்புரண்டது. தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது.
இதையடுத்து உடனடியாக இது பற்றி ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள், விபத்து காரணமாக தண்டவாளத்தில் கொட்டிய ஜல்லி கற்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தடம்புரண்ட என்ஜின் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.