ஒரே வாரத்தில் ‘அந்தர் பல்டி’.. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மாற்றிப் பேசிய முதல்வர் விஜய்!

  • சென்னை: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்வர் விஜய் அந்தர் பல்டி அடித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று நடந்த தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில், “மக்களவையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாமல் இருப்பதை சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும்” என விஜய் பேசியுள்ளார். 543 என நிரந்தரமாக்க வேண்டும் என முன்பு கூறியிருந்தார் முதல்வர் விஜய்.

    Advertisement

    கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திலும், ஆகஸ்ட் 12 அன்று சட்டப்பேரவையிலும், தொகுதி மறுசீரமைப்பே கூடாது என்றும், தற்போது உள்ள 543 என்ற எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறார் முதல்வர் விஜய்.

    Advertisement

    முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானம்

    தமிழக சட்டசபையில் கடந்த வாரம், தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக முதல்வர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைக்க வேண்டும், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை காலதாமதமின்றி, தற்போதுள்ள 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே 2029 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவதாக முதல்வர் விஜய் கூறினார்.

    543 என்ற எண்ணிக்கையே நிரந்தரமாக வேண்டும்

    நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும். வரவிருக்கும் மக்களவை தேர்தலிலும், அதன் பிறகு சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்யவேண்டும் என மத்திய அரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது எனத் தெரிவித்திருந்தார் விஜய்.

    Advertisement

    தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு

    இந்நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில், 'மக்களவையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாததை சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும்' என தமிழக முதல்வர் விஜய் பேசியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பே கூடாது. தற்போது உள்ள 543 என்ற எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து விஜய் பின்வாங்கி விட்டாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    விஜய் இன்று பேசுகையில், "மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் நாடாளுமன்றத்தில் நமது கூட்டுக்குரல் பலவீனமடைந்து விடுமோ என்ற நியாயமான கவலை தென் மாநிலங்கள் முழுவதும் உள்ளது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல், மனிதவள மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தென் மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.

    Advertisement

    பிரதிநிதித்துவம் குறையக்கூடாது - விஜய்

    இந்த சாதனைகள் தேசிய முன்னுரிமைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதையே காட்டுகின்றன. அதற்காக நமது பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது. தேசிய இலக்குகளை நிறைவேற்றியதற்காகப் பொதுக் கொள்கையானது மாநிலங்களைத் தண்டிப்பதாக அமைந்துவிடக் கூடாது.

    மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதன் காரணமாக எந்தவொரு மாநிலத்தின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ சதவீதமும் குறையாது என்ற தெளிவான சட்டப்பூர்வமான உறுதிமொழியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இத்தகைய அணுகுமுறை சமத்துவக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கும், நமது அரசியலமைப்புச் சட்டம் விரும்பும் கூட்டாட்சி சமநிலையைப் பாதுகாக்கும், மேலும் நமது ஜனநாயக அமைப்புகளின் மீது அனைத்து மாநிலங்களுக்கும் உள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும்." எனப் பேசியுள்ளார்.

    Advertisement

    பல்டி அடித்த விஜய்

    மக்களவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை 543-ஆக நிரந்தரமாக நிலைநிறுத்தக் கோரி தமிழக சட்டமன்றம் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய ஒரு வாரத்திற்குள்ளேயே, தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார்.

    543 எம்.பி இடங்களுக்கு மேல் எண்ணிக்கையை அதிகரிப்பதை முற்றிலுமாக எதிர்த்த நிலையிலிருந்து மாறி, விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும் பட்சத்தில் நாடாளுமன்றத்தின் மொத்த இடங்கள் அதிகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு மாறியுள்ள விஜய்யின் அணுகுமுறையை அரசியல் பார்வையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

    English Summary

    Chief Minister Vijay has made a U-turn regarding the issue of constituency delimitation. Speaking at the Southern Zonal Council meeting chaired by Union Home Minister Amit Shah today, Vijay stated that it must be legally ensured that the representation of states in the Lok Sabha does not decrease. Previously, Chief Minister Vijay had advocated for fixing the number of seats permanently at 543.