10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்!

  • சென்னை: மதுரையின் பிரபல அரசியல் பிரமுகரும் மருத்துவருமான முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் சரவணன், அரசியல் களத்தில் அடுத்தடுத்து அதிரடி முடிவுகளை எடுத்து வருபவர். தற்போது அவர் அதிமுகவில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

    Advertisement

    தமிழக அரசியல் களத்தில் தேர்தல் வியூகங்களும் கட்சித் தாவல்களும் புதியவை அல்ல என்றாலும், அரசியல் பயணத்தில் மிகவும் குறுகிய காலத்தில் பல முக்கிய கட்சிகளைக் கடந்து வந்துள்ள டாக்டர் சரவணன் இதுவரை பயணித்த கட்சிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

    Advertisement

    மதிமுக, திமுக, பாஜக, அதிமுக எனத் தமிழகத்தின் பிரதான துருவங்களாக விளங்கும் அனைத்துக் கட்சிகளிலும் வலம் வந்த அவர், தற்போது தன் புதிய அரசியல் முகவரியாகத் தமிழக வெற்றிக் கழகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

    டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் பாதை

    1. மதிமுக - ஆரம்பகாலப் புள்ளி

    மருத்துவத் துறையில் இருந்து அரசியல் உலகிற்குள் நுழைந்த டாக்டர் சரவணன், முதலில் வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) இணைந்தார். கட்சிப் பணிகளில் சுறுசுறுப்பாக இயங்கிய அவருக்கு மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. எனினும், 2015 ஆம் ஆண்டு கூட்டணி முடிவுகளில் நிலவிய குழப்பங்களைக் காரணமாகக் கூறி மதிமுகவில் இருந்து விலகினார்.

    Advertisement

    2. திமுக - எம்.எல்.ஏ பதவி

    மதிமுகவில் இருந்து விலகிய டாக்டர் சரவணன், 2016-ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக மருத்துவ அணியின் மாநிலத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிமுகவின் ஏ.கே.போஸிடம் தோல்வியடைந்தார். ஏ.கே.போஸ் மறைவால் மீண்டும் வந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன்முறையாக எம்.எல்.ஏ-வாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.

    2021 சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி திமுகவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், அதிருப்தியடைந்து திமுகவில் இருந்து வெளியேறினார்.

    Advertisement

    3. பாஜக - திடீர் தாவல்

    திமுகவில் சீட் மறுக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே, டெல்லி மேலிடத்தின் ஆசியோடு பாஜகவில் இணைந்தார் சரவணன். உடனே அவருக்கு மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட பாஜக சீட் வழங்கியது. அந்தத் தேர்தலில் தோல்வியுற்ற போதிலும், அவருக்கு பாஜக மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

    2022 ஆகஸ்ட்டில் காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் கார் மீது மதுரை விமான நிலையத்தில் பாஜகவினர் செருப்பு வீசினர். இந்தச் சம்பவத்தில் அதிருப்தியடைந்த டாக்டர் சரவணன், இரவோடு இரவாக பி.டி.ஆரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கோரியதுடன், பாஜகவில் இருந்தும் விலகினார்.

    Advertisement

    4. அதிமுக - எம்.எல்.ஏ சீட்

    பாஜகவில் இருந்து விலகியவுடன் அவர் மீண்டும் திமுகவிற்கே செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவருக்கும் 'ட்விஸ்ட்' கொடுத்து, ஜனவரி 2023-ல் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மக்களிடம் எளிதாக அணுகக்கூடிய தலைவராக எடப்பாடி பழனிசாமி விளங்குவதால் அதிமுகவை தேர்ந்தெடுத்ததாக அப்போது அவர் கூறினார். அதிமுகவில் மருத்துவரணி மாநில இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

    5. தவெக (TVK) - புதிய முகவரி

    அதிமுகவில் இருந்த டாக்டர் சரவணன், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மதுரை வடக்கில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இநிந்லையில், தனது அரசியல் எதிர்காலம் மற்றும் தேர்தல் வாய்ப்புகளைக் கணக்கிட்டு, தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார்.

    English Summary

    Dr. Saravanan—a prominent political figure and physician from Madurai, as well as a former MLA -has now resigned from the AIADMK and joined TVK. Dr. Saravanan stands out for having moved through several major parties within a remarkably short span of his political journey. Let us take a look at the various parties he has been associated with thus far.