செல்ஃபிக்கு தடை! சூயிங்கம் மெல்லக் கூடாது.. சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் வினோத ரூல்ஸ்

  • சென்னை: நம் அன்றாடம் செய்யும் பழக்கவழக்கங்கள் சில நாடுகளில் உங்களை சட்ட ரீதியாக சிக்கலுக்கு தள்ளும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆமாங்க இது உண்மைதான்.. ரொம்பவே சாதாரணமான விஷயம் என நாம் நினைக்கும் விஷயங்களுக்கு கூட சில நாடுகளில் தடை இருக்கிறது. தடை மட்டுமல்ல.. மீறினால் தண்டனையும் விதிக்கப்படும்..

    Advertisement

    வடகொரியாவைத்தான் இப்படி சுத்தி வளைத்து சொல்கிறார்கள் என நீங்கள் நினைக்கலாம். உண்மையில் அந்த நாடு இந்த லிஸ்டில் இல்லை. மக்கள் அதிக எண்ணிக்கையில் செல்லக்கூடிய வளர்ந்த நாடுகளில் கூட விசித்திரமான சட்ட திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. அவற்றை அறிந்து கொள்ளாமல், அந்த நாட்டில் கால் எடுத்து வைத்தால் கொஞ்சம் சிக்கல்தான்.. இந்த லிஸ்டில் இந்தியாவின் அண்டை நாடான இலங்கை, சிங்கப்பூர் கூட உள்ளன. அப்படி என்னதான் ரூல்ஸ் என்று பார்க்கலாம். வாருங்கள்..

    Advertisement

    சூயிங்கம் மெல்ல கட்டுப்பாடு

    ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் "சூயிங்கம்" மெல்ல கட்டுப்பாடு இருக்கிறது. பொதுமக்கள் சூயிங்கம்களை மென்றுவிட்டு கண்ட இடத்தில் ஒட்டிவிடுவதால், பொது இடங்கள் அசுத்தமாகின்றன என்பதால் இந்த கட்டுப்பாடு உள்ளது. அதாவது, ரயில் கதவுகள், லிப்ட்கள் மற்றும் பிற பொது உள்கட்டமைப்புகள் மீது சூயிங்கத்தை ஒட்டுவது அசுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால், அந்த நாட்டில் சூயிங்கம்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.

    1992-ஆம் ஆண்டு சூயிங்கம்களின் விற்பனைக்கு சிங்கப்பூர் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. எனினும், மருத்துவத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் சில சிகிச்சை நோக்குடைய சூயிங்கம்களுக்கு குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் சாதாரண சூயிங்கம்களின் விற்பனை மற்றும் விநியோகம் இன்றும் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

    Advertisement

    புறாக்களுக்கு உணவு போடக்கூடாது

    இத்தாலியின் வெனிஸ் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செயின்ட் மார்க் சதுக்கத்தில் புறாக்களுக்கு உணவளிப்பதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். நீண்ட காலமாக சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் பழமையான கட்டிடங்களுக்கு ஏற்படும் சேதம் குறித்து புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிகரித்த புறாக்களின் எண்ணிக்கையால், அவற்றின் எச்சங்கள் பல நூற்றாண்டுகள் பழமையான நினைவுச் சின்னங்கள் மற்றும் கட்டிடங்களை அரித்து சேதப்படுத்துவதாகவும் இதனால் தடை இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.

    எனவே புறாக்கள் மீது இரக்கம் காட்டி தீனி போட்டால், உங்கள் மீது அதிகாரிகள் இரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுத்துவிடுவார்கள். இத்தாலி போனால் இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் இல்லையென்றால், பர்ஸ் பதம் பார்க்கப்படும்.

    Advertisement

    செல்ஃபிக்கு கட்டுப்பாடு

    இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் புத்தர் சிலைகள் அருகே செல்ஃபி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதம் தொடர்பான விஷயங்களில் இலங்கை மிகவும் கடுமையான அணுகுமுறையை பின்பற்றுகிறது.

    குறிப்பாக புத்தர் சிலைகளுக்கு அருகில் நின்று மரியாதைக்குறைவாக போஸ் கொடுத்து புகைப்படம் அல்லது சிலைக்கு நேராக முதுகை காட்டி செல்ஃபி எடுப்பது ஆகிய செயல்கள் புத்தர் சிலையை அவமதிப்பதாக கருதப்படுகிறது. எனவே இவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறியதால், சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டதோடு, நாடு கடத்தப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இலங்கை செல்லும் டூரிஸ்ட்கள், மத வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் போது உள்ளூர் கலாசாரம் மற்றும் மத உணர்வுகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று உள்ளூர் அதிகாரிகள் ஸ்ட்ரிக்ட் ஆக சொல்கிறார்கள்.

    Advertisement

    ராணுவ சீருடை போன்ற ஆடைகள்

    கரீபியன் பிராந்தியத்தில் உள்ள பார்படோஸ் மற்றும் ஜமைக்கா உள்ளிட்ட சில நாடுகளில், பொதுமக்கள் Camouflage Pattern அதாவது ராணுவ வீரர்கள் அணிவது போன்ற ஆடைகள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் மட்டுமே அவற்றை அணிய அனுமதிக்கப்படுவதால், பொதுமக்கள் அல்லது சுற்றுலாப் பயணிகள் அவற்றை பயன்படுத்தினால் சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

    இதனால், அங்கு சுற்றுலா செல்லும் பயணிகள் கவனக்குறைவாக அப்படியான ஆடைகளை அணிந்தால் சிக்கல்தான். சில நேரங்களில் விமான நிலைய அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகள் அணிந்திருக்கும் Camouflage Pattern ஆடைகள், ஷார்ட்ஸ் அல்லது பைகளைக் கூட பறிமுதல் செய்வதாக சொல்கிறார்கள்.

    Advertisement

    சுவிட்சர்லாந்து

    பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படும் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு செல்வது வழக்கம். செல்வ செழிப்புள்ள நாடாக அறியப்படும் சுவிட்சர்லாந்தில், இரவு நேரத்தில் பாத்ரூம் பயன்படுத்துவது கூட கொஞ்சம் யோசித்துதான் பயன்படுத்த வேண்டுமாம். அதாவது, டாய்லட்டில் இரவு 10 மணிக்கு மேல் ஃப்ளஷ் (Flush) செய்வது சட்டவிரோதம் என்று வலைத்தளங்களில் உலவுகிறது. அது உண்மையல்ல என்றாலும் கூட சில அடுக்குமாடி குடியிருப்புகளில் இரவு நேரங்களில் பிறருக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்று இத்தகைய ரூல்ஸ்களை அவர்களாகவே வைத்து இருக்கிறார்களாம்.

    English Summary

    Chewing Gum: Many countries enforce unusual laws that may surprise tourists. While chewing gum is heavily restricted in Singapore, feeding pigeons in Venice can attract penalties. In Sri Lanka, disrespectful selfies near Buddha statues can lead to legal action, and camouflage clothing is banned for civilians in some Caribbean nations. Travelers are advised to understand local laws and customs before visiting foreign countries.