ரயில்வே கேட் கீப்பர் டூ டிஎஸ்பி.. 10ம் வகுப்புடன் நின்றவர் வாழ்க்கையில் ஜெயித்தது எப்படி?

  • பாட்னா: நீங்கள் கனவை நோக்கி எங்கே உங்களது பயணத்தை ஆரம்பிக்க விரும்புகிறீர்களோ, அங்கேயே அது ஆரம்பித்துவிடும். 10ம் வகுப்பு படிக்கும் போது, அப்பா தவறிய நிலையில், குடும்பத்தின் மொத்த பாரத்தை சுமந்த ராஜு, அப்படியான சூழலில் கிடைக்கும் வேலைசெய்து குடும்பத்தை காப்பாற்றியபடி, குரூப் டி தேர்வு மூலம் ரயில்வேயில் கேட் கீப்பராக சேர்ந்தவர், அப்படியே அஞ்சல் வழியாக டிகிரி படித்து, அத்துடன், டிஎஸ்பி ஆகி உள்ளார். நாம் 10வது தானே படித்திருக்கிறோம் என்று, நமக்கு உதவ யாருமே இல்லை என்று எண்ணி சோர்வு அடையாமல் விடாமல் படித்ததால் அவரது கல்வியால் இன்று டிஎஸ்பி ஆகி உள்ளார்.

    Advertisement

    நீங்கள் சாதாரண ஒரு வேலையில் இருப்பீர்கள்.. ஆனால் பெரிய கனவை மனசில் சுமந்து கொண்டிருப்பீர்கள். அதனை அடைய வேண்டும் என்றால், ஒழுக்கம், பொறுமை அவசியம்.

    Advertisement

    நடிகர் அஜித்குமார் விவேகம் படத்தில் கூறுவது போல், எல்லா சூழ்நிலையும் நீங்கள் தோற்றுவிட்டதாக கூறினாலும், நீங்களே நம்பும் வரை உங்களுக்கு தோல்வி இல்லை.. அதுதான் நிஜம்.. சூழ்நிலைகள் ஒருபோதும் தன் எதிர்காலத்தைத் தீர்மானிக்காது என்ற நம்பிக்கை தான் உங்களுக்கு வேண்டும். 2000களில் 12ம் வகுப்பு தேர்வில் ஒரு மாணவன் புவியியல் பாடத்தில் முதலிடம் வந்திருந்தார். அவர் பரோட்டோ கடையில் வேலை செய்தபடிதான் படித்தார். அவர் பின்னாளில் ஐஏஎஸ் ஆவேன் என்றார். அவர் சொன்னபடியே பரோட்டா கடையில் வேலை செய்த படியே படித்து ஐஏஎஸ் அதிகாரியானார். அவர்தான் வீரபாண்டியன் ஐஏஎஸ்.

    Advertisement

    மதுரையில் உள்ள கல்லூரியில் பி.ஏ மற்றும் எம்.ஏ படிக்கும் போது, குடும்ப வறுமையின் காரணமாக மதுரையில் உள்ள ஒரு பரோட்டா கடையில் இரவு நேரங்களில் சப்ளையராகவும் மாஸ்டராகவும் வேலை செய்தார் வீரபாண்டியன் வறுமைக்கு மத்தியிலும் விடாமுயற்சியுடன் படித்து, 2009-ஆம் ஆண்டு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனார். ஆந்திர மாநிலத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரை போல் பலர் உத்வேகத்துடன் படித்து ஐஏஎஸ், ஐபிஎஸ், டிஎஸ்பி என்று உயர்ந்து வருகிறார்கள். பீகாரில் இப்போது நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

    Advertisement

    பீகாரின் சமஸ்திபூரைச் சேர்ந்த ராஜு குமார் இந்திய-நேபாள எல்லையோரம் உள்ள ரக்ஸாலில் உள்ள ரயில்வே கேட் எண் 33-ல் ராஜு கேட்மேனாகப் பணிபுரிந்தார். நீண்ட வேலை நேரம். மாறுபட்ட வானிலை நிலைகளைக் கையாண்டு, ரயில்வே கிராசிங்கைப் பராமரிப்பதே அவரது அன்றாட வழக்கமாக இருந்தது. அத்துடன் பி.பி.எஸ்.சி தேர்வுக்கான தயாரிப்பையும் அவர் தொடர்ந்தார். தினமும் ரயில்வே கிராசிங்கில் நின்று, கேட்மேனாக 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு, மற்ற நேரங்களில் படித்து வந்தார். கடினமாக படித்த அவர், 70-வது பீகார் பொதுச் சேவை ஆணைய தேர்வை தனது முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று, துணைக் காவல் கண்காணிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் பீகார் மாநில அளவில் 72-வது ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார், இது அவரது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    கேட் கீப்பராக இருந்த ராஜுவின் ஆரம்ப கால வாழ்க்கை எளிதானது இல்லை..அவர் 10-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த 12 வயதே ஆனபோது, அவருடைய தந்தை காலமானார். இந்த இழப்பு அவரது குடும்பத்திற்குப் பொருளாதாரச் சிக்கல்களை ஏற்படுத்தியதுடன், கல்வியைத் தொடர்வதையும் சவாலாக மாற்றியது. அந்த இக்கட்டான கட்டத்தில், அவரது உறவினர் ராஜேஷ் குமார் சுமன் அளித்த ஆதரவு, அவர் படிப்பைத் தொடர உதவியது. ராஜேஷ், ரோசராவில் 'பி.எஸ்.எஸ் கிளப்' என்ற இலவச பயிற்சி மையத்தை நடத்தி வந்தார், அங்கு மாணவர்களுக்குப் போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. இந்த ஆதரவுடனும், தனது சொந்த மனஉறுதியுடனும், ராஜு இடைவிடாமல் படித்தார்.

    Advertisement

    தனது படிப்பைத் தொடர்ந்துகொண்டே, ராஜு ரயில்வே குரூப் டி தேர்வை எழுதினார், அதிலும் தனது முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றார். அவர் ரக்ஸாலில் கேட்மேன் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வேலை அவருக்குப் பொருளாதார ரீதியாக அவரது குடும்பத்தை மேலே தூக்கியது. அவரது அம்மா மற்றும் குடும்பத்தின் வறுமையை ராஜு போக்கினார்.

    அந்தவேலையே போதும் என்று இல்லாமல், இன்னும் அதிகமாக சாதிக்க விரும்பினார் ராஜு... முன்னோக்கிச் செல்வதற்கான வழிகளைத் தேடினார். வேலையின் மீதான அவரது அர்ப்பணிப்பும், கற்றலில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் பார்த்த நண்பர்கள், அவரை டிஎஸ்பி ஆக தயாராகுமாறு கூறினார்கள். அவர்களின் அறிவுரையைப் பின்பற்றி, ராஜு தனது ரயில்வே கடமையைத் தொடர்ந்துகொண்டே பட்டப்படிப்பில் சேர்ந்தார், அதோடு பி.பி.எஸ்.சி தேர்வுக்கும் தயாராகத் தொடங்கினார். இரண்டையும் சமநிலைப்படுத்துவது கடினமாக இருந்தது, ஆனாலும் படித்தார்

    ராஜு 12 மணி நேர வேலை முடிந்து, நள்ளிரவு நேரம் உட்கார்ந்து படித்துள்ளார். தினசரி ரயில்வே வேலைக்கு மத்தியிலும் தேர்வுக்கு தயாராகியும் வந்தார். பல வருட உழைப்புக்குப் பிறகு, ராஜு தனது முதல் முயற்சியிலேயே 70-வது பி.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்று, பீகார் போலீஸ் சேவையில் டி.எஸ்.பி ஆக மாறி உள்ளார். இந்த மாபெரும் வெற்றியைப் பெற்ற பிறகும், ராஜு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே, அவர் ரக்ஸாலில் உள்ள ரயில்வே கேட் எண் 33-க்குத் திரும்பி, எப்போதும் போலத் தனது கடமையைச் செய்தார். இப்போத டிஎஸ்பி ஆகி உள்ளார். பயிற்சிக்கு பின்னர் அவர் பணியில் சேருவார்.

    10ம் வகுப்பு படிக்கும் போது, அப்பா தவறிய நிலையில், குடும்பத்தின் மொத்த பாரத்தை சுமந்த ராஜு, அப்படியான சூழலில் கிடைக்கும் வேலைசெய்து குடும்பத்தை காப்பாற்றியபடி, குரூப் டி தேர்வு மூலம் ரயில்வேயில் கேட் கீப்பராக சேர்ந்தவர், அப்படியே அஞ்சல் வழியாக டிகிரி படித்து, அத்துடன், டிஎஸ்பி ஆகி உள்ளார். நாம் 10வது தானே படித்திருக்கிறோம் என்று, நமக்கு உதவ யாருமே இல்லை என்று எண்ணி சோர்வு அடையாமல் விடாமல் படித்ததால் அவரதுகல்வியால் இன்று டிஎஸ்பி ஆகி உள்ளார்.

    English Summary

    Raju lost his dad in Class 10, worked as a railway gateman, studied via distance, and cleared BPSC to become a DSP. Hard work and education win.