இப்படி இறங்கிட்டாரே! தாராபுரத்தில் மாட்டு வண்டி ஓட்டிய முதல்வர் விஜய்.. இடைத்தேர்தல் தோல்வி பயமா?

  • சென்னை: தமிழக அரசியலில் கடந்த சட்டசபை தேர்தலிம் போது முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்த விதம் முற்றிலும் வேறு. குறிப்பிட்ட சில இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்துவது, பிரச்சார வேனில் நின்றபடி சில நிமிடங்கள் ஆவேசமாக உரையாற்றுவது, பின்னர் புறப்பட்டுச் செல்வது என்பதுதான் அவரது வழக்கமான பாணியாக இருந்தது. தவெக தொடங்கிய காலத்திலோ அல்லது சட்டசபை தேர்தல்களிலோ கூட கிராமங்களின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று அவர் நேரடிப் பிரச்சாரம் செய்தது கிடையாது.

    Advertisement

    ஆனால், தற்போது நடைபெற்று வரும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற இடைத்தேர்தல்களில் முதலமைச்சர் விஜய் காட்டி வரும் அதீத மெனக்கெடல், தமிழக அரசியலையே புருவம் உயர்த்த வைத்துள்ளது. மதுராந்தகத்தில் வயலில் இறங்கி டிராக்டர் ஓட்டியதைத் தொடர்ந்து, இன்று தாராபுரத்தின் கிராமப்புறப் பகுதியில் மாட்டு வண்டியை அவரே ஓட்டி வாக்கு சேகரித்த நிகழ்வு, "ஆளும் கட்சிக்கு இடைத்தேர்தலில் தோல்வி பயம் வந்துவிட்டதா?" என்ற விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

    Advertisement

    தாராபுர கிராமங்களில் மாட்டு வண்டி ஓட்டிய விஜய்

    தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புறப் பகுதியில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த முதலமைச்சர் விஜய், வழியில் நின்றிருந்த ஒரு விவசாயியின் மாட்டு வண்டியில் திடீரென ஏறினார். வண்டியின் கயிற்றைக் கையில் பிடித்துக்கொண்டு மாடுகளை இயக்கியவாறு, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களைப் பார்த்துக் கைகூப்பி தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

    மதுராந்தகத்தில் காலில் செருப்பு கூட அணியாமல் சேற்றில் இறங்கி டிராக்டர் ஓட்டியது போலவே, கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கிராமிய அடையாளமான மாட்டு வண்டியை ஓட்டி, விவசாயக் குடும்பங்களின் வாக்குகளைக் கவரும் வியூகத்தை விஜய் கையில் எடுத்துள்ளார். ஒரு மாநிலத்தின் முதல்வர், அடிமட்ட கிராமங்களுக்குச் சென்று இதுபோன்ற காரியங்களைச் செய்வது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை அளித்தாலும், அரசியல் தளத்தில் இது அவரது சவாலான நிலையைத்தான் காட்டுகிறது என்கிறார்கள் பார்வையாளர்கள்.

    Advertisement

    முன் எப்போதும் இல்லாத அசாத்திய தீவிரம்: பின்னணி என்ன?

    சட்டசபை தேர்தலின் போது கொளத்தூர் போன்ற முக்கிய தொகுதிகளிலேயே 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே மேடைகளில் பேசிவிட்டுச் சென்றவர் விஜய். ஆனால், இரண்டு தொகுதிகளுக்கு மட்டுமே நடக்கும் இந்த இடைத்தேர்தலுக்கு, தனது வழக்கமான பணிகளையும் வழமையான ஓய்வுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு இத்தனை மணி நேரம் வீதி வீதியாக இறங்கி நிற்பது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

    இதன் பின்னணியில் இரு தொகுதிகளிலும் தவெகவுக்கு நிலவும் பலவீனமான கள நிலவரமே முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. தாராபுரம் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ள சத்யபாமாவுக்கு எதிராக உள்ளூர் கிராமப்புறங்களில் கடுமையான அதிருப்தி நிலவி வருகிறது. அதிமுகவில் இருந்து விலகி வந்த ஒருவருக்கு உடனடியாக சீட் வழங்கியதை தவெகவின் அடிமட்டத் தொண்டர்களே முழுமனதாக ஏற்கவில்லை. மேலும், தாராபுரத்தை தங்களின் கோட்டையாகக் கருதும் அதிமுகவும், செல்வாக்கை நிரூபிக்கத் துடிக்கும் திமுகவும் கிராமங்களில் அசுர வேகத்தில் வாக்கு சேகரித்து வருகின்றன. இந்த இருமுனைத் தாக்குதலால் தவெக கடும் பின்னடைவைச் சந்தித்து வருவதாக வந்த உளவுத்துறை தகவல்களே விஜய்யை இத்தனை தூரம் களத்தில் இறங்க வைத்துள்ளது.

    Advertisement

    அமைச்சரவை மொத்தமும் தொகுதியிலேயே தஞ்சம்

    முதலமைச்சர் மட்டும் வீதியில் இறங்கி ஓடவில்லை; ஒட்டுமொத்த அமைச்சரவையும், சட்டமன்ற உறுப்பினர்களும் கடந்த சில நாட்களாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளிலேயே தங்கியுள்ளனர். அமைச்சர்கள் அனைவரும் தலைமைச் செயலகக் கோப்புகளை ஒதுக்கிவிட்டு, வார்டு வாரியாகவும், கிராமங்கள் வாரியாகவும் முகாமிட்டு வாக்காளர்களை நேரில் சந்தித்து வருகின்றனர்.

    ஒரு சாதாரண இடைத்தேர்தலில், ஆளும் கட்சி முழு பலத்தையும், அமைச்சரவையையும் மொத்தமாக இறக்கி, முதல்வரே மாட்டு வண்டியும் டிராக்டரும் ஓட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது, தவெகவின் தலைமைக்குள் இருக்கும் உள்ளூர நடுக்கத்தையே காட்டுகிறது என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

    Advertisement

    மக்களின் மனதை மாற்றுமா எளிய மனிதர் பிம்பம்?

    மேல்தட்டு பிம்பத்தை உடைத்து, கிராமத்து எளிய மனிதராகத் தன்னைக் காட்டிக்கொள்ள விஜய் எடுக்கும் இந்த முயற்சிகள், பொதுமக்களிடையே பேசுபொருளாகியிருப்பது உண்மைதான். டீக்கடையில் அமர்ந்து தேநீர் அருந்துவது, டிராக்டர் ஓட்டுவது, மாட்டு வண்டி ஓட்டுவது என அவர் முன்னெடுக்கும் ஒவ்வொரு செயலும் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றன.

    ஆனால், இந்தச் செயற்கையான பிரச்சார உத்திகள் தேர்தல் அரசியலில் எடுபடுமா என்பதுதான் இப்போதைய கேள்வி. வேட்பாளர் மீதான உள்ளூர் அதிருப்தி மற்றும் அரசின் மீதான குறைகளை விஜய்யின் இந்த மாட்டு வண்டிப் பிரச்சாரம் தகர்த்து எறியுமா அல்லது எதிர்க்கட்சிகளின் தீவிர களப்பணி ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்குமா என்பது வாக்கு எண்ணிக்கை நாளில்தான் அதிகாரப்பூர்வமாகத் தெரியும்.

    English Summary

    From Tractor to Bullock Cart: Why CM Vijay Is Pulling Out All the Stops in Dharapuram Bypoll Campaign