சென்னை: மெர்சல் படத்தின் வெளியீட்டிற்காக அன்றைய செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சராக இருந்த கடம்பூர் ராஜூவிடம் நேரம் கேட்டு விஜய் காத்திருந்தார். இன்று தவெக பனையூர் அலுவலகத்தில் மணிக்கணக்கில் அதே கடம்பூர் ராஜூ காத்திருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.
தமிழக அரசியலில் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனை நிகழ்ந்தது. அதிமுகவின் முன்னாள் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான கடம்பூர் ராஜூ, சென்னை பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலக வாசலில் மணிக்கணக்கில் காத்திருந்து, இறுதியில் தவெகவில் இணைந்தார்.
இன்று நடந்ததை சமூக வலைதளங்களில் பலரும் விவாதிக்கின்றனர். ஏனெனில், 2016-2021 ஆட்சிக் காலத்தில் கடம்பூர் ராஜூ செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சராக இருந்தார். அந்த காலகட்டத்தில் நடிகர் விஜய் தனது மெர்சல் படத்தின் வெளியீட்டிற்கான அனுமதிக்கு நேரம் கேட்டு, அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்திக்க காத்திருந்ததாக கூறப்படுகிறது. அது போல் மெர்சல் பட விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை கடந்த பிப்ரவரி மாதம் கடம்பூர் ராஜூ பிரச்சாரத்தில் பேசுகையில், அரசியலுக்கு விஜய் ஒரு கத்துக்குட்டி. அ.தி.மு.க-வைப் பற்றிப் பேச விஜய்க்கு எந்த உரிமையும் கிடையாது. நான் அமைச்சராக இருந்தபோது விஜய் நடித்த 'மெர்சல்' படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்தார். நானும் உடன் இருந்தேன். அந்த நன்றி மறந்து அவர் பேசக்கூடாது. "விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை" என்ற சான்றிதழ் அளிக்கப்பட்டால் மட்டுமே படம் வெளியாகும் நிலை ஏற்பட்டது. தீபாவளி ரிலீஸ் என்பதால் வசூல் பாதிக்கும் எனக்கூறி 3 மணி நேரம் காத்திருந்து எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். சாத்தியமே இல்லாத நேரத்தில் அதுவும் ஞாயிற்றுக்கிழமை வந்தார். நேரில் வந்துவிட்டாரே என விஜய்க்காக உதவியவர் எடப்பாடி பழனிசாமி. இரவோடு இரவாக பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது. "வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடனாக இருப்பேன்" எனச் சொன்னவர்தான் விஜய். ஆனால், இன்று அ.தி.மு.கவை விமர்சனம் செய்கிறார். இவ்வாறு கடம்பூர் ராஜூ பேசியிருந்தார். ஆனால் இன்று காலம் மாறியது . இப்போது கடம்பூர் ராஜூவே விஜய் தலைமையிலான தவெக கட்சி அலுவலக வாசலில் காத்திருந்து உள்ளே சென்றார். இன்று தவெகவில் கடம்பூர் ராஜூ மட்டும் இணையவில்லை, முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், ஆனந்தன் ஆகியோர் இணைந்தனர். மேலும் 7 முன்னாள் எம்எல்ஏக்களும் இணைந்தனர். அதிமுகவின் முக்கிய முன்னாள் அமைச்சர்களான எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம். ஆனந்தன், சிவபதி ஆகிய ஐந்து தலைவர்களும் இன்று காலை நேரடியாக பனையூர் அலுவலகத்திற்கு சென்று பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர்கள் மட்டுமின்றி, அதிமுகவின் தர்மபுரி கிழக்கு மாவட்டச் செயலாளரும் பாப்பிரெட்டிப்பட்டி முன்னாள் எம்எல்ஏவுமான கோவிந்தசாமி தலைமையில் மேலும் 5 முன்னாள் எம்எல்ஏக்களும் தவெகவில் இணைந்தனர். தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் முன்பு, தவெகவுடன் கூட்டணி அமைக்க அனைத்துக் கட்சிகளுமே தயக்கம் காட்டின. தவெக தனித்துப் போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, நிலைமை மொத்தமாக மாறியது - தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால் பல கட்சிகள் இணைய ஆர்வம் காட்டின. தமிழக வெற்றிக் கழக தலைவர் சி. ஜோசப் விஜய் மே 10, 2026 அன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார். அரசியல் என்பது காலத்திற்கேற்ப மாறும் என்பதற்கு இன்றைய நிகழ்வு சரியான உதாரணம். ஒருகாலத்தில் ஆட்சி அதிகாரம் கையில் வைத்திருந்த கடம்பூர் ராஜூ, இன்று ஆட்சியாளராக மாறிய விஜய்யின் கட்சி அலுவலக வாசலில் காத்திருந்து இணைந்திருக்கிறார். தமிழக அரசியலில் இது ஒரு புதிய அத்தியாயம். அது மட்டுமா அலுவலக வாயிலில் அதிமுகவினர் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.சுவாரஸ்யமான தலைகீழ் மாற்றம்
யாரெல்லாம் இணைந்தனர்?
அரசியல் பின்னணி என்ன?
ஏற்கனவே 4 அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர். இன்று நடந்தது அதன் தொடர்ச்சி மட்டுமே.