5 லட்சம் AI ஏஜெண்டுகள்.. இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்

  • சென்னை: ஐடி துறை ஏற்கனவே மிக வேகமாக மாறி வருகிறது. ஐடி துறையில் ஆட்களை எடுப்பதைப் பல்வேறு நிறுவனங்களும் குறைத்துக் கொண்டுள்ளன. இதற்கிடையே வரும் காலத்தில் இந்தியாவில் ஐடி துறை எப்படி இருக்கும்.. இளைஞர்களுக்கு இந்தத் துறையில் வேலை கிடைக்குமா என்பது தொடர்பாக டாடா நிறுவனத்தின் சந்திரசேகரன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

    Advertisement

    இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், தனது எதிர்காலத் திட்டம் குறித்து ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஐடி துறை தான் படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் மிக பெரிய துறையாக உள்ள சூழலில், டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஐடி துறையில் வேலை தேடுபவர்கள் மற்றும் தற்போது பணியாற்றுபவர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    5 லட்சம் ஏஐ ஏஜெண்டுகள்

    TCS நிறுவனத்தின் வருடாந்திரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் என். சந்திரசேகரன், "விரைவில் எங்கள் நிறுவனத்தில் 5 லட்சம் AI ஏஜெண்டுகள் இருப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார். AI ஏஜெண்டுகள் என்பது மனிதர்களைப் போலவே குறிப்பிட்ட பணிகளைச் செய்யக்கூடிய செயற்கை நுண்ணறிவு சாப்ட்வேர் ஆகும். இவை டேட்டாவை ஆய்வு செய்வது, கோடிங் எழுதுவது மற்றும் வாடிக்கையாளர் சேவைகளை வழங்குவது போன்ற பணிகளைச் செய்யும். எதிர்காலத்தில் ஊழியர்களும், இந்த AI ஏஜெண்டுகளும் இணைந்து பணியாற்றுவார்கள் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்..

    வேலை குறையும்

    வேலைவாய்ப்பு குறையுமா என்ற கேள்விக்குச் சந்திரசேகரன் மிக வெளிப்படையாகப் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர், "ஆம், கண்டிப்பாக. முன்பு போல ஆயிரக்கணக்கில் ஆட்களை வேலைக்கு எடுக்கும் முறை இனி இருக்காது" என்று அவர் கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே ஐடி துறையில் ஆட்கள் எடுப்பது குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் TCS நிறுவனம் சுமார் 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இப்போது AI-ன் வருகை இந்த மாற்றத்தை இன்னும் வேகப்படுத்தியுள்ளது.

    Advertisement

    ஐடி துறை

    ஐடி நிறுவனங்கள் தற்போது பல சவால்களைச் சந்தித்து வருகின்றன.. போர் மற்றும் அரசியல் பதற்றங்களால் வெளிநாட்டு நிறுவனங்கள் ஐடி திட்டங்களுக்காகச் செலவு செய்வதைக் குறைத்துள்ளன. விலைவாசி உயர்வால் நிறுவனங்களின் லாபம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பம் வந்த பிறகு, பல வேலைகளைக் கணினிகளே மிக வேகமாகவும் மலிவாகவும் செய்யத் தொடங்கிவிட்டன. இதனால் செலவைக் குறைக்கவும், வேலையை விரைவுபடுத்தவும் TCS போன்ற நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தை நாடுகின்றன.

    நம்பிக்கை

    வேலைவாய்ப்பு குறையும் என்று சொன்னாலும், சந்திரசேகரன் ஒரு நம்பிக்கையான செய்தியையும் பகிர்ந்துள்ளார். அதாவது AI தொழில்நுட்பத்தின் வருகையால் "புதிய வாய்ப்புகள்" உருவாகும் என்றும் ஏஐ-க்கு ஏற்ப புதிய திறமையான இளைஞர்கள் தேவைப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது, பழைய பாணியிலான வேலைகள் குறைந்தாலும், AIயைக் கையாளத் தெரிந்தவர்களுக்கும், புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்பவர்களுக்கும் அதிக மவுசு இருக்கும். இதற்காக TCS மற்றும் பிற இந்திய ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு AI பயிற்சியை வழங்க அதிக முதலீடு செய்து வருகின்றன.

    Advertisement

    இந்தியா தற்போது உலகின் மிக பெரிய இணையப் பயனாளர்களைக் கொண்ட நாடாக உள்ளது. இதனால் கூகுள் போன்ற சர்வதேச நிறுவனங்களும், ரிலையன்ஸ் போன்ற உள்நாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்து வருகின்றன. குறிப்பாக, டேட்டா சென்டர்கள் அமைப்பதில் பெரும் போட்டி நிலவுகிறது.

    எதிர்காலம் எப்படி இருக்கும்?

    சுருக்கமாகச் சொன்னால், ஐடி துறையில் இனி அதிக எண்ணிக்கையிலான ஆட்கள் என்பதை விட அதிகத் திறமையான ஆட்கள் என்பதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். AI என்பது மனிதர்களுக்கு எதிரி அல்ல, அது ஒரு கருவி. அந்தக் கருவியைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன.!

    English Summary

    Tata Consultancy Services Chairman N Chandrasekaran announced at the AGM that the company will deploy 5,000,000 AI agents(இந்தியாவில் மாறி வரும் ஐடி துறை): Future of IT in India latest news in tamil.