சென்னை: பாரதிராஜாவின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான அவரது உடலுக்குப் பல்வேறு திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் நேரில் சென்று தங்களது அஞ்சலியைச் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில், பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் நேரில் வந்திருந்தார். அப்போது திடீரென உணர்ச்சிவசப்பட்டு பேசியது, அங்கிருந்தோரை நிலைகுலைய வைத்துவிட்டது.
உடல்நல குறைவால் இன்று காலை நீலாங்கரை இல்லத்தில் இயக்குனர் பாரதிராஜாவின் உயிர் பிரிந்தது. திரையுலகை சேர்ந்த பலரும் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை நீலாங்கரை இல்லத்தில் பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.
பாரதிராஜா இறப்பு செய்தி கேட்டு, அவரது மகள் ஜனனி, வெளிநாட்டிலிருந்து வந்து கொண்டிருக்கிறார்.. அதேபோல பாரதிராஜா மனைவியும் பதறியடித்து கொண்டு வந்தார்.. அவரது உடலை கண்டு கதறி அழுதுகொண்டிருந்தார். அப்போது ஆவேசமடைந்த கங்கை அமரன், "கடைசியில யாருமே இல்லாம ஓடிப் போயிட்டீங்களா... ஒரு ஆள் கூட இல்லைல... ஒருத்தரும் அவர்கூட இல்லாம போயிட்டீங்க, அனாதையா போயிட்டாரு... போங்க... போங்க..." என்று அங்கிருந்தவர்களை பார்த்துத் தனது ஒட்டுமொத்த ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்தார். கங்கை அமரன் இவ்வாறு வேதனையுடன் புலம்பிக் கதறியதைத் தொடர்ந்து, அங்கே வந்த நடிகை ராதிகா, அவரைத் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறி சமாதானம் செய்தார். இந்த உருக்கமான மற்றும் பரபரப்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமான அடுத்தடுத்த நாட்களில், பாரதிராஜா தனது மகனின் இழப்பைத் தாங்க முடியாமல் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மிகவும் உடைந்து போயிருந்தார். அந்தச் சோகமான காலகட்டத்தில், அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற கங்கை அமரன், பாரதிராஜாவை அந்தப் பெரும் துயரத்திலிருந்து எப்படியாவது மீட்டுக்கொண்டு வர வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தார். அதற்காக பாரதிராஜாவுடன் உட்கார்ந்து, அவரை உற்சாகப்படுத்தும் வகையில் "சிறுபொன்மணி அசையும்..." உள்ளிட்ட பல மெலோடி பாடல்களைப் பாடிக்காட்டினார். "இந்த பாட்டு உங்களுக்கு ஞாபகம் இருக்கா... 10 நிமிடத்தில் எழுதினேன். ஞாபகமிருக்கிறதா நீங்கள் தான், இந்த பாட்டை எழுதி விட்டு வா என சொன்னீர்கள். நானும் வெளிய போயி 10 நிமிடத்தில் இசையை கேட்டு எழுதி விட்டு வந்தேன். அதை பார்த்து விட்டு நீங்கள் கூட, நல்லா எழுதிருக்கடா' ன்னு பாராட்டினீங்களே? இப்படி எத்தனை பேரை நீங்கள் உருவாக்கி இருக்கிறீர்கள்" என்று நெகிழ்ந்து பாரதிராஜாவிடம் சொன்னார். ஆனால், என்னதான் கங்கை அமரன் பாசத்தோடு பாடல்களை பாடி காட்டினாலும், பாரதிராஜாவின் சிந்தனை முழுவதும் தன் மகன் நினைப்பிலேயே இருந்ததை அந்த வீடியோவில் பார்க்க முடிந்தது.. பாரதிராஜாவுக்கு பழைய நினைவுகள் மட்டுமே அடிக்கடி வந்து போயின.. அதைக் கண்டு சுற்றியிருந்தவர்கள் மன வேதனையும் அடைந்தனர். அதேபோல சமீபத்தில் பாரதிராஜாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியிருந்த போதும் கங்கை அமரன் அவரை நேரில் சந்தித்துத் தனது அன்பை வெளிப்படுத்தியிருந்தார். அப்போது அவருடன் அமர்ந்து பழைய திரையுலக நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட கங்கை அமரன், பல பாடல்களை பாடி மகிழ்வித்தார். கங்கை அமரனின் அந்தப் பாசப் பாடலைக் கேட்டு நெகிழ்ந்து போன பாரதிராஜா, கங்கை அமரனைக் கட்டித் தழுவிக்கொண்டு தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தியிருந்தார். அன்று இவர்களின் அசாத்திய பாசப் பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக வெளியான அந்த வீடியோ காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி இருந்தது நினைவிருக்கலாம். அப்படி பாசத்தோடு பழகிய கங்கை அமரன், இன்று பாரதிராஜாவின் உடலைப் பார்த்து உடைந்து கதறியது ஒட்டுமொத்தத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது...!!கடைசியில யாருமே இல்லாம ஓடிப் போயிட்டீங்களா
சோகத்தை மாற்ற முயன்ற கங்கை அமரன்!
நெகிழ வைத்த பழைய பாசப் பிணைப்பு: