சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட கிரானைட் தொழிலதிபர் வீரமணியிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மேலும் 7 சிறுமிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
பிரபல கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணிக்கு தேனாம்பேட்டையில் சொந்தமான விருந்தினர் இல்லம் ஒன்று இருக்கிறது. அங்கு வைத்து ஒரு சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் வழக்கில், மத்திய குற்றப்பிரிவு விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியை ஆரம்பகட்ட விசாரணையில் அடையாளம் காண முடியாததால் போலீசார் வழக்கை முடிப்பதற்கான அறிக்கையை தாக்கல் செய்திருந்தனர். அந்த அறிக்கையை சிறப்பு போக்சோ நீதிமன்றம் நிராகரித்து வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து சிறப்பு குழு அமைக்கப்பட்டு நடத்திய மறுவிசாரணையில் சம்பவத்தின்போது சிறுமியாக இருந்த பெண் அடையாளம் காணப்பட்டார். அவரிடம் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவரான 84 வயது தொழிலதிபர் வீரமணி, அவருக்கு உதவிய சாந்தி மற்றும் மகேந்திரசிம்மன் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இதே வழக்குடன் தொடர்புடையதாக மேலும் 7 சிறுமிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதகவும், அவர்களிடமும் நீதிமன்றத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த குற்றச் சம்பவங்கள் நடைபெற்ற காலகட்டத்தில் அவர்கள் சிறுமிகளாக இருந்தார்களா? அவர்களுக்கு நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச் சம்பவங்களின் தன்மை என்ன? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். 84 வயதான ஜெம் வீரமணி தற்போது மூன்று நாள் போலீஸ் காவலில் உள்ள நிலையில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இதுபோன்று வேறு சிறுமிகள் யாரேனும் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனரா? இந்த சம்பவங்களில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.