சென்னை: ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்ட உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரிடம் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) போலீஸார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
ஜெம் வீரமணி சிறுமிகளை நாசம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் வீரமணியுடன் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சென்னை போக்சோ நீதிமன்றத்தில் தங்களுக்கு ஜாமீன் கேட்டு சாந்தியும் மகேந்திர சிம்ஹனும் மனுதாக்கல் செய்தனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வாதம் செய்தனர். மேலும் இருவரையும் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து நீதிபதி பத்மா, 3 நாட்கள் போலீஸ் கஸ்டடி கொடுத்தார். அந்த வகையில் புழல் சிறையில் இருந்து சாந்தியும் மகேந்திர சிம்ஹனும் பாதுகாப்புடன் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. ஜெம் வீரமணி, கணேசனிடம் பெற்ற வாக்குமூலங்களை வைத்து சாந்தி, மகேந்திர சிம்ஹனிடம் சிசிபி விசாரணை நடத்தியது. "வீரமணி எத்தனை ஆண்டுகளாக சிறுமிகளிடம் அத்துமீறியுள்ளார்? இதுவரை எத்தனை சிறுமிகளை வீரமணி நாசம் செய்துள்ளார்? வீரமணி சிறுமிகளிடம் அத்துமீறும் வீடியோவை வைத்து யாரெல்லாம் பணம் பெற்றனர்? வீரமணியை தவிர சிறுமிகளிடம் வேறு யாரெல்லாம் அத்துமீறினர்? யாருக்கெல்லாம் வீரமணி சிறுமிகளை நாசம் செய்த வீடியோ பகிரப்பட்டது? எத்தனை காவல் துறை அதிகாரிகள், முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது? என பல கோணங்களில் கேள்விகள் கேட்கப்பட்டன. எந்தெந்த இடங்களில் சிறுமிகளை வீரமணி நாசம் செய்தார் என்பது குறித்து அறிந்து அந்த இடங்களுக்கு சாந்தி, கணவர் மகேந்திர சிம்ஹனை அழைத்து செல்ல போலீஸ் முடிவு செய்துள்ளது. முன்னதாக சென்னை போக்சோ நீதிமன்றத்தில் சாந்தி, மகேந்திர சிம்ஹன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், 2019 ஆம் ஆண்டு நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு தாமதமாக கடந்த ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தாமதமாக வழக்கு பதிவிற்கு எந்த விளக்கமும் இல்லாததால் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வழக்கில் எந்த குற்றத்திலும் நாங்கள் ஈடுபடவில்லை. புகார்தாரர், பாதிக்கப்பட்டவரல்ல, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோரோ , பாதுகாவலர்களோ அல்ல. பாதிக்கப்பட்ட எந்த சிறுமிகளும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. வழக்கில் காவல் துறையினர், நிபுணர்கள்தான் சாட்சியாக உள்ளனர். அவர்களின் வாக்குமூலங்கள் காவல் துறை வசம்தான் உள்ளன. அதனால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்பில்லை. ஆகஸ்ட் 28 ஆம் தேதி கைது செய்யப்பட்ட தங்களை 24 மணி நேரத்திற்கு பிறகுதான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்து 3 வாரங்கள் நெருங்கும் நிலையில் இதுவரை எங்களை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி காவல் துறை மனுத்தாக்கல் செய்யாததாலும் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டதாலும் தங்களை சிறையில் அடைத்து வைத்திருக்க அவசியம் இல்லை என்பதால் எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருக்கிறோம் என அந்த மனுவில் தெரிவித்தனர். ஜாமீன் தரக் கூடாது என காவல் துறை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.வாக்குமூலங்கள்
துருவி துருவி கேள்வி
ஜாமீன் கேட்ட சாந்தி
சிறுமிகள் யார்?
தாமதம்
கஸ்டடியில் எடுக்கவில்லை