ஜெம் வீரமணி பாலியல் வழக்கு விஸ்வரூபம்.. பல கோடி கைமாறியதா? விசாரிக்க தனி டீம் அமைத்த போலீஸ் கமிஷனர்!

  • சென்னை: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி வழக்கில், அதிகாரிகளுக்கு இடையே கைமாறிய லஞ்சப் பணம் குறித்த தகவல்களை வெளிக் கொண்டுவர புதிய விசாரணைக்குழு அமைத்து சென்னை காவல்துறை ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

    பிரபல கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் வழக்கில், மத்திய குற்றப்பிரிவு விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியை ஆரம்பகட்ட விசாரணையில் அடையாளம் காண முடியாததால் போலீசார் வழக்கை முடிப்பதற்கான அறிக்கையை தாக்கல் செய்திருந்தனர்.

    அந்த அறிக்கையை சிறப்பு போக்சோ நீதிமன்றம் நிராகரித்து வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து சிறப்பு குழு அமைக்கப்பட்டு நடத்திய மறுவிசாரணையில், சம்பவத்தின்போது சிறுமியாக இருந்த பெண் அடையாளம் காணப்பட்டார். அவரிடம் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

    வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவரான 84 வயது தொழிலதிபர் வீரமணி, அவருக்கு உதவிய சாந்தி மற்றும் மகேந்திரசிம்மன் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். ஜெம் வீரமணி தற்போது போலீஸ் காவலில் உள்ள நிலையில் புழல் சிறையில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கில் பல தொழிலதிபர்களுக்கு தொடர்பு உள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதல்வர் விஜய், சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், இந்த வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தி, அதன் முன்னேற்றம் குறித்த தகவல்களை அவ்வப்போது தனக்குத் தெரிவிக்கவும் காவல்துறைக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஜெம் வீரமணியிடம் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் யார் என விசாரணை நடத்த புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறையின் கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் புதிய குழு அமைத்து காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

    வீரமணி மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க எவ்வளவு பணம் கைமாறியது? யார் யாருக்கு கைமாறியது? எனவும் விசாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஜெம் வீரமணி மீதான பாலியல் புகார்களை விசாரித்து வரும் நிலையில் பணப்பரிமாற்றங்களை விசாரிக்க புதிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    ஜெம் வீரமணி மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்களை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் நடந்துள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றங்களை முழுமையாக விசாரித்து உண்மையை கண்டறியவே இந்த புதிய சிறப்பு குழு அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Chennai Police Commissioner Amalraj has ordered the formation of a new inquiry team to uncover details regarding bribe money exchanged between officials in the case of businessman Gem Veeramani, who is currently imprisoned following his arrest for the sexual assault of minor girls.