சென்னை: ஜெம் வீரமணி வழக்கில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என்று, விசாரணையை மேற்கொண்டு வரும் சிறப்பு விசாரணைக்குழுவிடம் திமுக பொருளாளர் டிஆர் பாலு புகார் மனு கொடுத்துள்ளார். பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைத்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் கூறப்பட்ட்டுள்ளது.
பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யபட்டு வீரமணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக, சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன், வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோர் கைது செய்ய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சாந்தி மற்றும் மகேந்திர சிம்மனை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். வீரமணியின் அக்கிரமங்களை விசாரிக்க தமிழக அரசு சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்துள்ளது. இந்தக்குழுவிடம் தான் திமுக தரப்பில் இன்று பரபரப்பு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. திமுக பொருளாளர் டிஆர் பாலு புகார் இந்த புகார் மனுவை கொடுத்துள்ளார். அதில், முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோரை அழைத்து ஆதாரங்களை பெற வேண்டும் என்றும், மூன்று பேரின் குற்றச்சாட்டுகளும் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையுடன் நேரடியாக தொடர்புடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:- "திமுக மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்துள்ள முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகிய மூவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்து அவர்களிடம் உள்ள ஆதாரங்களை பெற வேண்டும். கடந்த 25 ஆம் தேதி, முதல்வர் விஜய் ஜெம் வீரமணியை திமுக பாதுகாத்ததாக பொதுவெளியில் குற்றம் சாட்டியுள்ளார். அதே நாளில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஜெம் வீரமணியை திமுக பாதுகாத்ததோடு, அவர் மீதான வழக்கையும் தவறாக முடித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 26ஆம் தேதி சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், ஜெம் வீரமணியை பாதுகாப்பதற்காக திமுக அவரிடமிருந்து 500 கோடியை பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார். எனவே, பொதுவெளியில் இவர்கள் மூவரும் முன் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளை மூன்று விதமாக கருத வாய்ப்பிருக்கிறது. இவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள், திமுக மீதும் திமுக தலைவர் மீதும் அவதூறு பரப்பும் நோக்கத்துடன் வேண்டுமென்றே பொய்யாகப் புனையப்பட்டவை. இவர்கள் 3 பேரிடமும் இது தொடர்பான மிக முக்கியமான தகவல்கள் உள்ளன.. ஆனால், அவற்றை அவர்கள் போக்சோ சட்டத்தின்படி விசாரணை அதிகாரிகளிடம் வழங்கவில்லை. புலனாய்வு அதிகாரிகளின் கோப்பு தேதியில் உள்ள விசாரணை தகவல்கள் அதிகாரப்பூர்வமற்ற வகையில் கசிந்துள்ளன.. அவற்றை இவர்கள் பொதுவெளியில் பரப்புகின்றனர்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த வழக்கில் ஆதாரங்கள் மறைக்கப்படுவதற்கான இடம் அளிக்கமால் எல்லா ஆதாரங்களையும் சேகரிக்க வேண்டும். அது தான் விசாரணை மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். குற்றச்சாட்டுகள் வேண்டுமென்றே பொய்யாக முன்வைக்கப்பட்டிருந்தாலோ, சட்டப்படி தெரிவிக்க வேண்டிய தகவல்கள் மறைக்கப்பட்டிருந்தாலோ, விசாரணை ரகசியங்கள் அனுமதியின்றி வெளியிடப்பட்டிருந்தாலோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டம் பதிய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.விஜய்யிடம் விசாரணை நடத்த வேண்டும்
திமுக மீது பொய் குற்றச்சாட்டு