சென்னை: ஜெம் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குழந்தை நல ஆர்வலர் ஒருவர் புகார் கொடுத்ததன் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் வீரமணி, அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், வீரமணி நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் உதவியாளர் கணேசன் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும், வீரமணிக்கு டிரைவர்களாக இருந்த 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிப்பதற்காக, சென்னை காவல் ஆணையரின் நேரடிக் கண்காணிப்பில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி, சென்னை மேற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு இணை காவல் ஆணையர் திஷா மிட்டல், டிஜிபி அலுவலக ஊடகத் தொடர்பு அதிகாரியும், காவல் கண்காணிப்பாளருமான ஜெ. முத்தரசி, பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை காவல் ஆணையர் வி.வி. கீதாஞ்சலி ஆகிய 4 மூத்த பெண் காவல் அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையே ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ஜெம் வீரமணியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், சில ஊடகங்கள் யூகத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் அரசியல் கட்சியினரையும் மற்றவர்களையும் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இத்தகைய செயல் புலன் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, பொதுமக்கள் மத்தியிலும் சந்தேகத்தை ஏற்படுத்தும். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான வீரமணியுடன் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் இருப்பது போன்ற புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தன. இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவர்களுடன், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதைப் போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது., இதனால் இந்த வழக்கு அரசியலாக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, வழக்கை சிபிஐ விசாரணைக்கோ, சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கோ மாற்ற வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மதிகாரி, ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், "ஏற்கெனவே அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளதால், இந்த மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், "இந்த வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?" எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு, "இந்த வழக்கைத் தாக்கல் செய்த பிறகுதான் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவைத் திரும்பப் பெற அனுமதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.