சென்னை: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெம் வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெங்கடரமணன், லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
அதிலும் அந்த விழாவில் ஜெம் வீரமணியை தனது குடும்ப நண்பர் என குறிப்பிட்டு லோகேஷ் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் வீரமணியுடன் அமைச்சர்கள் இருக்கும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.
ஜெம் வீரமணி விவகாரத்தில் திமுக கண்டுக்கொள்ளாமல் விட்டதாக விமர்சித்து வரும் நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாலியல் புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட வீரமணியுடன் தவெக அமைச்சர்கள் லோகேஷ் தமிழ்ச்செல்வன், வெங்கட்ரமணன் கலந்து கொண்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. வீரமணிக்கு எதிராக கடந்த ஆண்டு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு போதிலும் ஒரு பாலியல் குற்றவாளியுடன் தவெக அமைச்சர்கள் மேடையை பகிர்ந்துள்ளார்கள் என்ற விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டில் உண்மையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். ஜெம் வீரமணி, சிறுமிகளை படிக்க வைப்பதாகவும் பரிசு பொருட்களை கொடுத்தும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6ஆம் தேதி புகார் எழுந்தது. அடுத்த நாளே அக்டோபர் 7ஆம் தேதி ஜெம் வீரமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்களில் தெளிவாக இல்லை என்பதால் வேறு வலுவான ஆதாரங்கள் கிடைத்ததும் ஜெம் வீரமணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கடந்த 2025 ஆம் ஆண்டு முடிவு எடுக்கப்பட்டதாம். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரித்த சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார், ஜெம் வீரமணிக்கு எதிரான ஆதாரங்களும் பாதிக்கப்பட்டவர்களும் கிடைக்காததால் வழக்கை பிப்ரவரி மாதமே முடித்து வைத்ததாக அறிக்கையை போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி பத்மா, சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோ ஆதாரம் இருக்கும்போது, வழக்கை எப்படி முடிக்க முடியும்? என கூறி மறுவிசாரணைக்கு ஆகஸ்ட் 19 ஆம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு சூடுபிடித்து ஆகஸ்ட் 29ஆம் தேதி வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கில் நீதிபதி பத்மா மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகவே இருந்திருக்கும். இதனால் பத்மாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன. இவ்வாறாக இந்த வழக்கு பல்வேறு பாதைகளை கடந்து தற்போது மும்முரமாக விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீரமணியுடன் தவெக அமைச்சர்கள் கலந்து கொண்டதாக சொல்லும் விழா புத்தக வெளியீட்டு விழா. அது நடந்தது ஜூலை 6ஆம் தேதி. பத்திரிகையாளர் பிரகாஷ் சுவாமி எழுதிய "வீழ்ந்த மனிதர்கள்" என்ற விழாவில்தான் ஜெம் வீரமணி, அமைச்சர்கள் லோகேஷ் தமிழ்ச்செல்வன், வெங்கடரமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில்தான் வீரமணியை குடும்ப நண்பர் என லோகேஷ் தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டிருந்தார். தொழிலதிபரான வீரமணி, பெரும்பாலான அரசியல் தலைவர்களுடன் நட்பு ரீதியில் இருந்ததால் லோகேஷ் அது போல் குடும்ப நண்பர் என தெரிவித்திருக்கலாம். மற்றபடி தவெக அமைச்சர்கள் வீரமணி மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்ட பிறகுதான் ஒரே விழாவில் கலந்து கொண்டுள்ளனர். அப்போதெல்லாம் வீரமணி குறித்த புகார்கள் யாருக்கும் தெரியாமல் இருந்தன. ஆகஸ்ட் 19ஆம் தேதி இந்த கேஸை நீதிபதி பத்மா மறு விசாரணைக்கு உத்தரவிடச் சொன்ன போதுதான் இது போன்ற ஒரு மோசமான செயலை, தொழிலதிபர் என்ற போர்வையில் வீரமணி செய்துள்ளார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.பாலியல் குற்றவாளி வீரமணி
என்ன நடந்தது
ஜெம் வீரமணிக்கு எதிரான ஆதாரங்கள்
குளோசர் ரிப்போர்ட்
நீதிபதி பத்மா
வீரமணி கைது
புத்தக வெளியீட்டு விழா
தவெக அமைச்சர்கள்
வீரமணி