சென்னை: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கை முன்பு விசாரித்த விபச்சார தடுப்புப் பிரிவு உதவி ஆணையர் யாஸ்மின், காவல் ஆய்வாளர்கள் மகேஷ் குமார், ராஜ லட்சுமி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி (84) மீதான போக்சோ வழக்கு விவகாரத்தில், திடுக்கிடும் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. குழந்தை உரிமை ஆர்வலர் ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் கீழ் உள்ள விபச்சார தடுப்புப் பிரிவில் கடந்த ஆண்டு கொடுத்த புகார் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த பென் டிரைவ் மூலம் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி சிக்கினார்.
தேனாம்பேட்டையில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அந்த வீட்டில் சிறுமிகள் மற்றும் பெண்களை வரவழைத்து அவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக ஏழ்மை நிலையில் உள்ள சிறுமிகளுக்கு பணம், செல்போன் மற்றும் ஆடம்பரப் பரிசு பொருட்களை கொடுத்து வீரமணி, தனது பாலியல் இச்சைகளை தீர்த்துள்ளார். இவரால் 100-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் வீரமணியின் தேனாம்பேட்டை வீட்டை கவனித்து வந்த அவரது உதவியாளர்கள் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். வீரமணி, சிறுமிகளுடன் இருந்த ரகசிய வீடியோக்களை வைத்திருந்தவரும், 23 ஆண்டுகளாக ஜெம் கிரானைட்ஸில் பணிபுரிந்தவருமான கணேசன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முன்பு இந்த வழக்கை விசாரித்த போலீசார் ஆழமாக விசாரிக்காமல், அந்த வீடியோவில் இருக்கும் நபர்களை கண்டறிய முடியவில்லை எனக் கூறி வழக்கை ரத்து செய்யும்படி நீதிமன்றத்தை நாடினர். ஆனால், நீதிபதி இந்த வழக்கை கைவிட முடியாது என தெரிவித்தார். பின்னர், மீண்டும் போலீசார் விசாரணை நடத்தியபோதுதான் வீரமணி மற்றும் அவரால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்தன. இந்த நிலையில், ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றவாளிகள் யாரும் தப்ப கூடாது என சென்னை காவல் ஆணையர் அமல்ராஜுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், இவ்வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தி, அதன் முன்னேற்றம் குறித்த தகவல்களை அவ்வப்போது தனக்குத் தெரிவிக்கவும் காவல்துறைக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தி உள்ளார். இந்த நிலையில், ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக முந்தைய ஆட்சியில் இருந்த காவல் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். வழக்கின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என விளக்கம் கேட்டு இந்த வழக்கை கையாண்ட காவல் ஆய்வாளர் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை சம்மன் அனுப்பி விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கை முன்பு விசாரித்த விபச்சார தடுப்புப் பிரிவு உதவி ஆணையர் யாஸ்மின், காவல் ஆய்வாளர்கள் மகேஷ் குமார், ராஜ லட்சுமி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்கை வேகமாக முடித்து வைத்தது ஏன் எனக் கேட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வீரமணி மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க எவ்வளவு பணம் கைமாறியது? யார் யாருக்கு கைமாறியது என போலீசர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜெம் வீரமணி மீதான பாலியல் புகார்களை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வரும் நிலையில் பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக விசாரிக்க சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் புதிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.