ஜெம் வீரமணி வழக்கில் சாந்தி மற்றும் அவரது கணவருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்.. போக்சோ கோர்ட் உத்தரவு!

  • சென்னை: ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஜெம் கிரானைட்ஸ் நிறுவனரான தொழிலதிபர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன், வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளது.

    சாந்தி, மகேந்திர சிம்ஹன்

    இந்த வழக்கில் சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகிய இவருரையும் மூன்று நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    அந்த மனுவில், ஏற்கெனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட வீரமணி அளித்த தகவலின் பேரில் இவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இன்னும் எத்தனை சிறுமிகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்? எவ்வளவு நாட்களாக குற்றம் நடந்தது? வேறு யார் யாருக்கு எல்லாம் தொடர்பு என்பது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்.

    எனவே, இருவரையும் மூன்று நாட்கள் தங்களின் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என காவல் துறை தரப்பில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    3 நாட்கள் போலீஸ் காவல்

    இந்த மனு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பத்மா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இன்று மனுவை விசாரித்த நீதிபதி பத்மா, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

    சாந்தி ஜாமீன் மனு

    இதற்கிடையே சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். கைது செய்யப்பட்டு 3 வாரங்கள் நெருங்கும் நிலையில் இதுவரை எங்களை காவலில் வைத்து விசாரிக்க கோரி காவல் துறை மனு தாக்கல் செய்யாததாலும், ஆதாரங்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டு விட்டதாலும் தொடர்ந்து தங்களை சிறையில் அடைத்து வைத்திருக்க அவசியமில்லை என்பதாலும் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி இருந்தனர்.

    இந்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் விவரங்கள் மிகுந்த ரகசியத்துடன் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், மனுதாரர்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டதில் எந்த தாமதமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், ஜாமீன் மனுவுக்கு காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் தேவைப்படுவதால் ஜாமீன் மனுவை வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    English Summary

    POCSO Special Court has ordered that Shanthi and Mahendra Simhan, arrested in the sexual assault Pocso case involving Gem Veeramani, be taken into custody for three days for interrogation.