சென்னை: போக்சோ வழக்கில் கைதான ஜெம் வீரமணி விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளின் பங்கு குறித்தும் விசாரணை நடைபெறுவதாக சிறப்பு புலனாய்வு குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கல்விக்கு நிதி உதவி கேட்டு வரும் சிறுமிகளை வீரமணி பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்த வழக்கில், ஜெம் வீரமணி, அவரிடம் வேலை செய்து வந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து, கணேசன் என்பவரும், மேலும் வீரமணியிடம் பணிபுரிந்த 3 டிரைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெம் வீரமணி மீதான வழக்கில் சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் அருண் தலையீட்டின் காரணமாக, வீரமணி, சாந்தியின் பெயர் புகாரில் குறிப்பிட்டிருந்தும் காவல்துறையினர் சரிவர விசாரிக்காததால், வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வழக்கை மூட 40 கோடி ரூபாய் வரை பணம் கைமாறியுள்ளதால், வழக்கை மூடியது குறித்தும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கு தொடர்பான ஆதாரங்களை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு வழங்கும்படி வாராகிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வாராகி தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அக்டோபர் 1 மற்றும் 6 ஆம் தேதிகளில் சிறப்பு புலனாய்வுக் குழு முன் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சிறப்பு புலனாய்வு குழு தரப்பில், வழக்கின் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உள்ளது. மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அடுத்தகட்ட அறிக்கை தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. விசாரணை முறையாக நடந்து வருவதால் சிபிஐ விசாரணை தேவையில்லை. வழக்கை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா சிறப்பாக விசாரித்து வருகிறார் என பாராட்டு தெரிவித்த நீதிபதி, காவல்துறை தரப்பில் அடுத்த கட்ட அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, விசாரணையை அக்டோபர் 26 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.வாக்கிங் ஸ்டிக் ஊன்றி நடந்து வந்த ஜெம் வீரமணி.. பாலியல் வழக்கில் போக்சோ நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!